Published : 20 Sep 2025 12:04 AM
Last Updated : 20 Sep 2025 12:04 AM
மும்பை: அதானி மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) நிராகரித்ததை தொடர்ந்து நேற்றைய வர்த்தகத்தில் அதானி குழுமப் பங்குகளின் விலை ஒரு சதவீதம் முதல் 13 சதவீதம் வரை ஏற்றம் கண்டது.
அதானி குழுமம் பங்குகளின் விலையை செயற்கையான முறையில் அதிகரித்ததாகவும், கணக்கு வழக்குகளில் மோசடி செய்ததாகவும் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் 2023 ஜனவரியில் குற்றம்சாட்டியது. இதையடுத்து, அதானி குழுமப் பங்குகளின் விலை 50 சதவீதம் வரை வீழ்ச்சியை சந்தித்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் தொடர்ந்து மறுத்தது.
இந்நிலையில், அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் முன்வைத்த குற்றச்சாட்டுகளை, இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியமான செபி முற்றிலும் நிராகரித்து. எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என்று செபி தெரிவித்துள்ளது.
செபியின் இந்த அறிவிப்பு, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்ததால், அதானி பங்குகளுக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது. இதையடுத்து, அதானி குழும நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு வெள்ளிக்கிழமை ஒரே வர்த்தக தினத்தில் மட்டும் 69,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஏற்றம் கண்டது.
அதன்படி, அதானி டோட்டல் காஸ் பங்கின் விலை 7.35%, அதானி என்டர்பிரைசஸ் பங்கின் விலை 5.04%, அதானி பவர் 12.40%, அதானி போர்ட்ஸ் 1.09%, அதானி கிரீன் எனர்ஜி 5.33%, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 4.70% ஏற்றம் கண்டன.
‘ஆழமான விசாரணைக்குப் பிறகு ஹிண்டன்பர்க் அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது. அதானி குழுமம் விதிமுறைகளை மீறி செயல்படவில்லை’ என்று செபி அறிவித்ததை அடுத்து, பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களிடையே கிடைத்த அதிக வரவேற்பு காரணமாக, அதானி குழும பங்குகள் புதிய எழுச்சி கண்டுள்ளன.
இதனிடையே, “ஹிண்டன்பர்க் அறிக்கை ஆதாரமற்றது என்பதை செபியின் ஆழமான விசாரணை உறுதிப்படுத்தியுள்ளது. அதானி குழுமம் எப்போதும் வெளிப்படைத்தன்மை, நேர்மை ஆகியவற்றை கடைபிடித்து வருகிறது” என அதானி குழும தலைவர் கவுதம் அதானி ரியாக்ட் செய்ததும் கவனிக்கத்தக்கது.
அதானி நிறுவனம் Vs மவுஹா மொய்த்ரா: பங்குகளின் விலையை செயற்கையான முறையில் அதிகரித்தது உள்ளிட்ட முறைகேடுகளை செய்ததாக, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் 2023-ல் எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்திலும் இருந்து, அதானி குழுமத்தை இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியமான செபி விடுவித்த நிலையில், அதனை கிண்டலடிக்கும் வகையில், எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா.
“ஆஹா. அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் அதானி குழுமத்தை செபி விடுவித்துவிட்டதா? இதை நான் எதிர்பார்க்கவே இல்லையே” என்று நகைச்சுவையாக அவர் பதிவிட்டிருந்தார்.
அதானிக்கு செபி நற்சான்றிதழ் வழங்கியதை நம்பமுடியவில்லை என்ற மஹுவா மொய்த்ராவின் பதிவுக்கு அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் ராபி சிங் உடனடியாக எதிர்வினையாற்றினார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மதிப்புக்குரிய எம்.பி. அவர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் சந்தோஷமான துர்கா பூஜை வாழ்த்துகள்” என்று தெரிவித்திருந்தார்.
அதேவேளையில், “அதானி குழுமம் மீதான 22 குற்றச்சாட்டுகளில் செபி நற்சான்று வழங்கியிருப்பது வெறும் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு மட்டுமே என்பதால், எஞ்சிய குற்றச்சாட்டுகளுக்கு அனைத்து கோணங்களிலும் ‘மதானி முறைகேடு’ தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று காங்கிரஸ் சார்பில் ரியாக்ட் செய்திருக்கிறார் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.
அதானி விவகாரம்: மத்திய அரசு அதிரடி - அதானி மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று இந்தியப் பங்கு பரிவர்த்தனை வாரியமான செபி நிராகரித்ததும், அதன் தாக்கத்தால் அதானி குழும பங்குகளின் விலை எழுச்சி கண்டதும் ஒரு பக்கம் இருக்க, இந்த விவகாரத்தில், டெல்லி வடமேற்கு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஒன்றும் கவனிக்கத்தக்கது.
அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு குற்றம்சாட்டி வெளியிட்ட அறிக்கையை மையமாக வைத்து பல்வேறு ஊடகங்களில் செய்திகள், கட்டுரைகள் வெளியிடப்பட்டன.
இவற்றை எதிர்த்து அதானி எண்டர்பிரைசஸ் சார்பில் டெல்லி வடமேற்கு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி அனுஜ் குமார் சிங் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், அதானி குழுமத்துக்கு எதிரான அவதூறு செய்திகளை
வெளியிட தடை விதிக்கப்பட்டது.
டெல்லி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு மத்திய தகவல் - ஒலிபரப்புத் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், 138 யூடியூப் வீடியோக்கள், 83 இன்ஸ்டாகிராம் பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து செய்தியாளர்கள் தரப்பில் டெல்லி வடமேற்கு மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘இந்த உத்தரவு செய்தியாளர்கள், ஊடக நிறுவனங்களுக்கு எதிராக உள்ளது. நீதிமன்ற உத்தரவை அடிப்படையாக வைத்து சமூக வலைத்தள பதிவுகளை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT