Published : 17 Sep 2025 05:30 AM
Last Updated : 17 Sep 2025 05:30 AM

50 சதவீத வரிவிதிப்பு நடவடிக்கைக்கு பிறகு முதல்முறையாக டெல்லியில் இந்தியா - அமெரிக்கா தீவிர பேச்சுவார்த்தை

கோப்புப்படம்

புதுடெல்லி: இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று மீண்டும் தொடங்கியது. அமெரிக்க வர்த்தகத் துறை பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவினருடன் மத்திய வர்த்தகத் துறை செயலர் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இது ஆக்கப்பூர்வமாக இருந்ததாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரைவில் நடைபெற உள்ள அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தங்கள் நாட்டு பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து, உலக நாடுகள் விதிக்கும் வரிக்கு ஏற்ப பதில் வரி விதிக்கப்படும் என்று கூறிய அவர், அதற்கான பட்டியலை வெளியிட்டார். பின்னர் 90 நாடுகளுக்கு அந்த நடவடிக்கையை தள்ளிவைத்தார்.

இதற்கிடையே, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உலக நாடுகள் முன்வந்தன. இதில் சில நாடுகளுடன் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுடனான பேச்சுவார்த்தை முடியவில்லை. ஆனாலும், 90 நாள் காலக்கெடு முடிந்ததும், உலக நாடுகள் மீதான வரி விதிப்பு அமலுக்கு வந்தது.

இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக 5 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட வேளாண் விளைபொருட்கள், பால் பொருட்களுக்கான சந்தையை திறக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை. இதனால், உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையே, இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 7-ம் தேதி அமலுக்கு வந்தது. அத்துடன், ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 27-ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்மூலம், இந்திய பொருட்கள் மீது 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டதால் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற இருந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தை தடைபட்டது.

இந்நிலையில், சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். ட்ரம்பின் வரி விதிப்பால், சீனாவுடன் இந்தியா நெருங்கி வருவதாக அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தடைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என ட்ரம்ப் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். இதை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றிருந்தார்.

அமெரிக்க குழுவினர் வருகை: இந்த சூழ்நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தகம் தொடர்பான 6-வது சுற்று பேச்சுவார்த்தை 16-ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியானது. இதற்காக, அமெரிக்காவின் வர்த்தகத் துறை துணை பிரதிநிதி (தெற்கு மற்றும் மத்திய ஆசியா) பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவினர் நேற்று டெல்லி வந்தடைந்தனர்.

இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைக்கான இந்திய பிரதிநிதியும், மத்திய வர்த்தகத் துறை சிறப்பு செயலருமான ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழுவினரை லிஞ்ச் குழுவினர் சந்தித்துப் பேசினர். அப்போது, இரு நாடுகள் இடையே தடைபட்ட பேச்சுவார்த்தையை தொடர்வது என ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கப்பட்ட பிறகு இரு நாட்டு பிரதிநிதிகளும் முதல் முறையாக சந்தித்துப் பேசி உள்ளனர்.

ஆக்கப்பூர்வமான சந்திப்பு: இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா வந்துள்ள அமெரிக்க வர்த்தகத் துறை பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவினருடன் மத்திய வர்த்தகத் துறை செயலர் தலைமையிலான குழுவினர் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது ஆக்கப்பூர்வமாக இருந்தது. இருதரப்பும் ஏற்கக்கூடிய வகையில் ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும்’ என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியாவை சேர்ந்த சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு (ஜிடிஆர்ஐ) வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்காவின் வேளாண் விளை பொருட்கள் மற்றும் பால் பொருட்களை இந்தியா வாங்க வேண்டும் என அந்த நாட்டு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் விவசாயிகளின் நலன் கருதி, இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியா மீது விதிக்கப்பட்ட 25 சதவீத கூடுதல் வரியை ரத்து செய்யாதவரை பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை’ என கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்தியா வந்துள்ள அமெரிக்க குழு இந்த முறை, வேளாண் விளைபொருட்கள் மற்றும் பால் பொருட்களை வாங்க வேண்டும் என அழுத்தம் தராது என கூறப்படுகிறது. ஆனால், மக்காச்சோளத்தை வாங்குமாறு வலியுறுத்துவார்கள் என கூறப்படுகிறது.

அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவார்டு லுட்னிக் நேற்று முன்தினம் கூறும்போது, “இந்தியாவில் 140 கோடி மக்கள் உள்ளதாக பெருமை பேசுகின்றனர். அவர்களுக்காக தலா 25 கிலோ மக்காச்சோளத்தை இந்தியா ஏன் வாங்கக் கூடாது? இந்தியா எங்களுக்கு பொருட்களை விற்பனை செய்கிறது. அவற்றுக்கு அதிக வரி விதிக்கிறது. ஆனால், எங்கள் மக்காச்சோளத்தை வாங்குவதில்லை. இனியும் எங்கள் மக்காச்சோளத்தை வாங்காவிட்டால், அமெரிக்க சந்தையை இழக்க நேரிடும்’’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

7 மணி நேரம் பேச்சுவார்த்தை: அமெரிக்க வர்த்தக குழு வட்டாரங்கள் கூறியதாவது: அமெரிக்க - இந்திய குழுவினர் இடையே சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய குழுவினர் உடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்தது. இரு நாடுகள் இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும். இந்த பேச்சுவார்த்தையில் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். வரும் நவம்பரில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடும். தற்போது இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகம் 191 பில்லியன் டாலராக உள்ளது. வரும் 2030-ம் ஆண்டில் இரு நாடுகள் இடையிலான வர்த்தகம் 500 பில்லியன் டாலரை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அமெரிக்க வர்த்தக குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x