Published : 16 Sep 2025 01:45 AM
Last Updated : 16 Sep 2025 01:45 AM
சென்னை: உடன்குடி அனல்மின் நிலையத்தில் சோதனை மின்னுற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் தலா, 660 மெகாவாட் திறனில், இரண்டு அலகுகள் உடைய அனல்மின் நிலையத்தை, ரூ.13,076 கோடியில் மின்வாரியம் அமைத்து வருகிறது. 2012-ம் ஆண்டு திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில். கட்டுமான பணிகள், கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உடன்குடி மின்நிலையத்துக்கு நிலக்கரி எடுத்து வருவதற்காக, உடன்குடி கடற்கரையில் இருந்து கடலில், 5 கி.மீ., துாரத்துக்கு நிலக்கரி முனையம் அமைக்கப்பட்டு உள்ளது.
மின்நிலையத்தின் கட்டுமான பணிகளை, மத்திய அரசின் பிஎச்இஎல் நிறுவனம் மேற்கொள்கிறது. 2021 - 22ம் ஆண்டில் மின்னுற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், கட்டுமான பணிகள் முடிக்கப்படாததால் திட்டமிட்டபடி மின்னுற்பத்தியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந் நிலையில், கடந்த 11-ம் தேதி உடன்குடி மின்நிலையத்தின் முதல் அலகில், சோதனை மின்னுற்பத்தி துவங்கியுள்ளது. அப்போது, 87 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்பட்டது. இந்த மின்சாரம், மின் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: உடன்குடி அனல்மின் நிலையத்தின் முதல் அலகில் பல தொழில்நுட்ப சவால்களை கடந்து, தொடர் முயற்சியின் காரணமாக சோதனை மின்னுற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக, சோதனை செய்த போது 10 தொழில்நுட்ப இடர் பாடுகள் கண்டறியப்பட்டு, அவை சரி செய்யப்பட்டது. தற்போது, கனரக உலை எண்ணெய் பயன்படுத்தி, மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. கப் பலில் இருந்து முனையத்துக்கு நிலக்கரி எடுத்து வருவதற்கான அமைப்பு ஏற்படுத்தும் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
வணிக மின்னுற்பத்தியை தொடங்க திட்டமிட்டபடி அனைத்து அலகுகளில் உற்பத்தி செய்ய வேண்டும். ஒரு மின்நிலையம் முழு திறனில், 72 மணி நேரத்துக்கு தொடர்ந்து மின்னுற்பத்தி செய்த பின், வணிக மின் உற்பத்தி துவங்கியதாக அறிவிக்கப்படும். எனவே, உடன்குடியில் சோதனை பணி களை விரைவாக முடித்து, இந்தாண்டு இறுதிக்குள் வணிக மின் உற்பத்தி துவக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT