Published : 14 Sep 2025 02:22 PM
Last Updated : 14 Sep 2025 02:22 PM

நவீன வேளாண் இயந்திரங்களால் லாபத்தை அறுவடை செய்யும் பழங்குடி விவசாயிகள்!

பழங்குடியின விவசாயிகளுக்கு நவீன வேளாண் கருவிகளை வழங்கிய அமைச்சர், அரசு செயலர் உள்ளிட்ட பழங்குடியினர் நலத் துறை அதிகாரிகள்.

பாரம்பரிய விவசாய முறைகளை மட்டுமே நம்பி இருந்த பழங்குடி மக்களின் வாழ்வில், உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்க தொல் குடிவேளாண்மை மேலாண்மை திட்டம் - ஐந்திணை என்ற புதிய அணுகுமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, வேளாண்மையில் இயந்திரமயமாக்குதலை ஊக்குவிப்பதாகும். இத்திட்டத்தினை, சிறந்த முறையில் செயல்படுத்த தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறை, மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத் துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இத்திட்டத்துக்கான, திட்டப் பகுதிகளாக பச்சை மலை (திருச்சிராப்பள்ளி) கொல்லி மலை (நாமக்கல்), கல்வராயன் மலை (கள்ளக் குறிச்சி, சேலம்), ஜவ்வாதுமலை (திருவண்ணாமலை), நெல்லிவாசல்நாடு (திருப்பத்தூர்) பீஞ்சமந்தை (வேலூர்), போதகாடு (தருமபுரி) கடம்பூர் மலை (ஈரோடு), மலையாளப்பட்டி (பெரம்பலூர்) மற்றும் நீலகிரி ஆகிய பழங்குடியின மக்கள் வசிக்கும் 10 பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. இதனைதொடர்ந்து இப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி விவசாயிகளை ஒருங்கிணைத்து 15 விவசாய சங்கங்கள் பழங்குடியினர் நலத்துறை மேற்பார்வையில் உருவாக்கப்பட்டன.

இச்சங்கங்களில் 3,417 குடும்பங்கள் உறுப்பினர்களாக உள்ளன. இச்சங்கங்களை நிர்வகிப்பது தொடர்பாக மூன்று கட்ட தொடர் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப்பயிற்சியில் தாங்கள் பயன்படுத்த தேவையான வேளாண் இயந்திரங்களை தேர்வு செய்வதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

உறுப்பினர்களின் சமூக பொருளாதாரம், விவசாய நிலத்தின் தன்மை, பயிர் வகை மற்றும் தேவைப்படும் இயந்திரங்கள் தொடர்பாக, மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தின் மூலம், விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தேவைப்படும் இயந்திரங்களின் பட்டியல், நிலத்தின் தன்மைக் கேற்ப தயார் செய்யப்பட்டன. இத்திட்டத்துக் காக 2023- 2024, 2024- 2025 நிதி ஆண்டுகளில் ரூ.6.56 கோடி ஒதுக்கப்பட்டது.

பயிற்சி முகாமில் பங்கேற்ற பழங்குடி விவசாயிகள்

பழங்குடியின விவசாயிகளின் பொறுப்பு மற்றும் ஆக்கப்பூர்வ பங்களிப்பினை உறுதிப்படுத்த 10 சதவீத தொகையினை விவசாய சங்கங்கள் பங்களிப்பாக வழங்கியுள்ளன. 90 சதவீத தொகையினை மானியமாக தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இத்திட்டத்துக்கென தனித்த செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் கூறுகையில், 'இத்திட்டத்தின் வெற்றியால் 2025- 2026ம் நிதியாண்டில் ரூ.5.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 6 மாவட்டங்களில் 2,200 குடும்பங்களை உறுப்பினராக கொண்ட 10 சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இயந்திர வைப்பு கூடங்கள் அரசின் நிதி உதவியுடன் விவசாய சங்கங்கள் மூலம் கட்டப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் முக்கிய வெற்றி என்பது அரசின் மேற்பார்வையில் இத்திட்டத்தினை விவசாய சங்கங்களே தலைமையேற்று செயல்படுத்தி வருவதாகும். இதனால் நீடித்த நிலைத்த வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்ட செயல்பாடு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் கூட்டுறவு மனப்பான்மையை வளர்த்து வருவதோடு வளங் களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதையும் உறுதி செய்துள்ளது' என்றார்.

மேலும் இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடச் செய்து லாபகரமான விவசாய முறைகளை உருவாக்கி புதிய நம்பிக்கை யினை அளித்துள்ளது. இது பழங்குடியின மக்களின் வாழ்வில், புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், மலையாளப்பட்டி விவசாயி சி.சந்திரகுமார்: எங்களது சங்கத்தில் 182 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் எனக்கு 4.5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் மக்காச்சோளம், மரவள்ளிக் கிழங்கு போன்ற பயிர்களை 2.5 ஏக்கர் அளவில் பயிரிட்டு வந்தேன். டிராக்டர், களை இயந்திரம், மருந்து தெளிப்பான் மற்றும் கூட்டு அறுவடை இயந்திரம் போன்ற நவீன கருவிகளை பயன்படுத்தியதன் மூலம், 4.5 ஏக்கர் நிலமும் முழுமையாக பயன்படுத்த முடிந்துள்ளது. மேலும் 1 ஏக்கருக்கான செலவு 24 சதவீதம் குறைந்து, எனது ஆண்டு வருமானம் 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x