Published : 10 Sep 2025 06:55 PM
Last Updated : 10 Sep 2025 06:55 PM
கொழும்பு: இலங்கையில் உள்ள பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தை இந்திய அரசு உதவியுடன் மேம்படுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம், இலங்கையின் பிற பகுதிகளை இணைக்கும் முக்கிய இடமாக உள்ளது. இந்தியாவுக்கு மிக அருகில், ராமேசுவரம் மற்றும் வேதாரண்யத்திலிருந்து 40 நாட்டிகல் மைல் தொலைவில் உள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது விடுதலைப் புலிகளின் கப்பல் படையை வீழ்த்துவதற்காக, அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதல்களில் பருத்தித்துறை துறைமுகம் சேதமடைந்தது . 1995-ல் விடுதலைப் புலிகளிடம் இருந்து இந்த துறைமுகம் இலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டது.
2004 சுனாமியின்போதும் இந்த துறைமுகம் கடும் சேதமடைந்தது. 7 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த துறைமுகத்தில் 300 படகுகள் வரையிலும் நிறுத்த முடியும், மேலும், மீன் பதனிடும் அறை, மீன் விற்பனை நிலையம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன.
இலங்கையின் வட மாகாணப் பகுதியில் கடல் அட்டை பண்ணை வளர்ப்பில் கவனம் செலுத்தி வரும் சீன அரசு, இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள இந்த துறைமுகத்தை மேம்படுத்த தீவிரம் காட்டியது. ஆனால், இலங்கை அமைச்சரவை பருத்தித்துறை துறைமுகத்தை மேம்படுத்த இந்திய அரசுக்கே ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் மேம்பாட்டு திட்டத்துக்காக, இந்தியாவின் மீன்பிடித் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் மீன் வளத்துக்கான மத்திய கடலோரப் பொறியியல் நிறுவனத்தினர் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் யாழ்ப்பாணத்தில் உள்ள வட மாகாண ஆளுநர் மாளிகையில், ஆளுநர் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற, பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தின் மேம்பாட்டு பணிகளுக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய துணைத் தூதர் சாய் முரளியும் இதில் பங்கேற்றார்.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் இந்திய தூதுக் குழுவினரை வரவேற்ற ஆளுநர் வேதநாயகன், இந்திய அரசின் உதவிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், இந்த திட்டப் பணிகளுக்கு வட மாகாணத்தின் ஒத்துழைப்பு முழுமையாக வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT