Published : 06 Sep 2025 10:52 AM
Last Updated : 06 Sep 2025 10:52 AM
சென்னை: தங்கம் விலை இன்று (செப்.6) ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தைக் கடந்து புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. இது அத்தியாவசியத் தேவைக்காக நகை வாங்குவோரை மட்டுமின்றி ஆடம்பரத்துக்காக நகை வாங்குவோரையும் கூட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,005-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.80,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 138 ரூபாய்க்கும், கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,38,000-க்கும் விற்பனை ஆகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலை அதிகரித்தும் குறைந்தும் வருகிறது. கடந்த 26-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மேலும், அமெரிக்காவில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதும் இந்தியாவில் தங்கம் விலை உயர்வதற்கு இன்னொரு காரணம். இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 10 முதல் 15 சதவீதம் வரை தங்கம் விலை உயரும் என்றும் கூறப்படுகிறது.
ஆடம்பரப் பொருள் என்பதைத் தாண்டி பாதுகாப்பான முதலீடு என்பதாலும் அதன் மீதான முதலீடு உலகம் முழுவதுமே பரவலாக இருக்கிறது. அதுவும் இந்தியாவில் தங்கம் வைத்திருப்பது அவசரத் தேவைக்கு கைகொடுக்கும் பொருளாகவும் உள்ளது.
2025 ஜனவரி 1-ம் தேதி தங்கம் ஒரு பவுன் ரூ.57,200-க்கு விற்பனையானது நினைவுகூரத்தக்கது. கடந்த 8 மாதங்களில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.22,840 வரை உயர்வைக் கண்டுள்ளது.
தங்கம் இப்போது வாங்கலாமா? தங்கத்தின் விலை தற்போது உச்சத்தில் இருந்தாலும், நீண்ட கால முதலீட்டை விரும்புபவர்கள் தங்கம் வாங்கலாம். அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான அடித்தளத்தை அமைக்கும். ஆனால், மற்றவர்கள் தங்கம் விலை குறையும்போது நகை வாங்குவது லாபகரமானது என நிதி ஆலோசகர்களின் ஆலோசனையாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT