Published : 05 Sep 2025 06:11 PM
Last Updated : 05 Sep 2025 06:11 PM
ராமேசுவரம்: அமெரிக்காவின் கடல் உணவு பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிப்பை ஈடுகட்டுவதற்கு மீன் உணவு பொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு வழங்க வேண்டும், என மீனவத் தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி) கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் உணவு உற்பத்தி, அன்னிய செலாவணி ஈட்டுதல், கிராமப்புற வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், உணவு பாதுகாப்பு எனப் பல துறைகளில் மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாரம்பரிய வாழ்வாதாரமாகத் தொடங்கிய இத்தொழில் இன்று வணிகரீதியாகவும் தேசிய பொருளாதாரத்தில் அத்தியாவசியமாகவும் திகழ்கிறது.
அதேசமயம், மீன்பிடி துறை அதிகப்படியான மீன்பிடித்தல், சட்டவிரோத மற்றும் அழிவுக்குரிய தொழில்நுட்பங்கள், கடல் வாழ்விட அழிவு, சுற்றுச்சூழல் பாதிப்புகள், அரசு மானியக் குறைப்புகள் இவற்றால் மீன்வளம் குறைந்து, மீனவர்கள் வாழ்வாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்படும். குறிப்பாக அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.24 ஆயிரம் கோடி கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் தமிழகத்திலிருந்து அந்நாட்டுக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்ட 500 டன் கடல் உணவு நடுவழியில் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வரிவிதிப்பினால் இந்திய கடல் உணவுப் பொருட்களின் விலை அமெரிக்க சந்தையில் கூடுவதால் அமெரிக்காவில் இந்திய இறால் வாங்கும் வியாபாரிகள் அனைவரும் ஆர்டர்களை ரத்து செய்கின்றனர்.
இது குறித்து மீனவத் தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி) மாநிலச் செயலாளர் சி.ஆர். செந்தில்வேல் நமது செய்தியாளரிடம் கூறியதாவது, “மீன் உணவு பொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மீனவர் அமைப்புக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் .
பதப்படுத்தப்பட்ட மீன் உணவு மற்றும் மீன்பிடி உபகரணங்கள், மீன் வளர்ப்பு சாதனங்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரியில் இருந்து 5 சதவீத வரிவிதிப்பு வரம்புக்குள் கொண்டு வந்து சிறிய ஆறுதலாக இருந்தாலும், தற்போது அமெரிக்காவில் இந்திய மீன் உணவுப் பொருட்கள் மீது 50 சதவீத வரிவிதிப்பு செய்ததில் மீன் உணவு ஏற்றுமதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் போட்டி, பல்வேறு நாடுகளின் சுங்கம் மற்றும் வரிவிதிப்பு முறை, போக்குவரத்து செலவின உயர்வு போன்ற காரணங்களால் மீன் உணவு ஏற்றுமதி சரிவை சந்தித்து உள்ளது, தற்போதைய சூழலில் மீன் உணவு ஏற்றுமதிக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கி மீன் உணவு ஏற்றுமதியை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளது. மேற்கண்ட பாதிப்புகள் அனைத்தும் இறுதியில் சாமானிய மீனவன் தலையில் கட்டப்படுகிறது.
இந்த சூழ்நிலையை போக்க உள்நாட்டு மீன் உணவு பொருட்கள் நுகர்வை அதிகப்படுத்த வேண்டும். எனவே மீன் உணவு பொருட்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி, நாட்டின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும்” இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT