Published : 05 Sep 2025 06:38 PM
Last Updated : 05 Sep 2025 06:38 PM
ஜிஐஎஸ் எனப்படும் புவியியல் தகவல் முறைமை தொழில்நுட்பம் சொத்து மதிப்பீட்டுக்கு மிகவும் உதவியாக உள்ளதாக நில மதிப்பீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட சொத்தின் சந்தை மதிப்பை மதிப்பிட்டு, அதன் மதிப்பு குறித்த துல்லியமான அறிக்கையை வழங்கும் தொழில்முறை நிபுணர்கள் மதிப்பீட்டாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசுத் துறைகள் மற்றும் தனிநபர்கள் போன்ற பல்வேறு தரப்பினருக்காக சொத்து மதிப்பு, காப்பீடு, வரிவிதிப்பு, விற்பனை, அடமானக் கடன்கள் போன்ற பல்வேறு சேவைகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு, புவியியல் தகவல் முறைமை (Geographic Information System - GIS) என்ற தொழில்நுட்பம் உறுதுணையாக உள்ளதாக மதிப்பீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, பாலாஜி அசோசியேட்ஸ் நிர்வாக இயக்குநர் எல்.பாலாஜி கூறுகையில், நிலம் மற்றும் கட்டிட மதிப்பீட்டாளர்களுக்கு ஜிஐஎஸ் தொழில்நுட்பம் பெரிதும் உதவிகரமாக உள்ளது. இதன் மூலம், இடம் சார்ந்த தரவுகளின் அடிப்படையில், புவியியல் வடிவங்களை புரிந்துகொள்ள பகுப்பாய்வு செய்யப்படுகிறது. மேலும் தரவுகளை வரைபடங்கள், 3டி காட்சிப்படுத்துதல்கள் மூலம் எளிதாகப் புரிந்துகொள்ளும்படி காட்டுகிறது. இத்தொழில்நுட்பம் மூலம் எடுக்கப் படும் புகைப்படங்களில், வேளாண்மை நிலம், அரசு அலுவலகக் கட்டிடங்கள், வணிகக் கட்டிடங்கள் ஆகியவற்றுக்கு தனித்தனி வண்ணங்கள் கொடுத்து பிரித்து காட்டுகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பிடுவதற்கு உறுதுணையாக உள்ளது. வெள்ள பாதிப்புகள் மற்றும் பிற பேரிடர்களை மதிப்பிடுவதற்கு உதவுகிறது. நகரங்களின் நிலப் பயன்பாடு, உள்கட்டமைப்பு போன்றவற்றை நிர்வகிக்க முடியும். நில உரிமை, மதிப்பு, மேலாண்மை மற்றும் பயன்பாடு உள்ளிட்ட நிலத் தகவல் மற்றும் நிலப் பதிவுகளின் அனைத்து அம்சங்களையும் நிர்வகிக்க இத்தொழில் நுட்பம் உதவுகிறது.
விரிவான நில நிர்வாக அமைப்பில் உள்ள அனைத்து நிலத் தகவல்களுடனும், அரசாங்கங்கள் நிலத் தகவல் மேலாண்மை, சொத்து மதிப்பீடு மற்றும் பகுப்பாய்வு பொதுமக்களுடனான தொடர்பு ஆகியவற்றை இதன்மூலம் மேம்படுத்த முடியும், என அவர் தெரிவித்தார்.
இந்திய மதிப்பீட்டாளர்கள் கழக மதுரை கிளை தலைவர் விஜயகுமார் கூறுகையில், புவியியல் தரவை உருவாக்க, பகுப்பாய்வு செய்ய, நிர்வகிக்க இத்தொழில்நுட்பம் பயன்படுகிறது. இது பொதுவாக செயற்கைக் கோள்கள், வான்வழி படங்கள், தரை ஆய்வுகள் போன்ற பல்வேறு மூலங்களில் இருந்து தரவுகளை சேகரித்து, அவற்றை ஒரே தரவுத்தளத்தில் ஒருங்கிணைக்கிறது.
பின்னர் இதனை பகுப்பாய்வு செய்து, வரைபடங்கள், விளக்கப் படங்கள், பிற காட்சிப் படுத்துதல்களை உருவாக்கலாம். இதன் மூலம் நகர்ப்புற திட்டமிடல், இயற்கை வள மேலாண்மை, அவசரகால பதில் மற்றும் பொது சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முடிவெடுக்கும் செயல் முறைகளைத் தெரிவிக்கப் பயன்படும், எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT