Published : 03 Sep 2025 01:48 PM
Last Updated : 03 Sep 2025 01:48 PM
பொள்ளாச்சி: செப்டம்பர் 2 உலக தென்னை தினத்தை முன்னிட்டு, இளநீர் விவசாயிகளுக்காக ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தால் புதிய தென்னை ரகம் ‘ஏஎல்ஆர்-4’ வெளியிடப்பட்டுள்ளது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன தமிழர்களின் ஐவகை நிலத்திணைகள். தென்னையும் தென்னை சார்ந்த தொழில்களும் உள்ள ஆறாம் திணையாக அடையாளம் காணப்படும் மேற்கு மண்டலத்தில் தென்னை அதிகம் விளையும் பகுதியாக பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகள் உள்ளன. தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பல்வேறு சவால்களை சந்தித்துவரும் சூழ்நிலையில், வறட்சி, நோய் தாக்குதல், விலை வீழ்ச்சி என பலமுனை தாக்குதல்களை எதிர்கொள்ளும் தென்னை விவசாயிகளுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம்.
ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் 1963-ம் ஆண்டு வேளாண் ஆராய்ச்சி நிலையமாக தொடங்கப்பட்டு, 2002-ல் தென்னை ஆராய்ச்சி நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தென்னையில் ஆராய்ச்சி, புதிய ரகங்கள் வெளியிடுதல், நோய் தாக்குதல்களை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை கண்டுபிடித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. தென்னை விவசாயத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து புதிய தென்னை ரகங்களை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தென்னை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சுதா லட்சுமி கூறியதாவது: ”அரசம்பட்டி நெட்டை ரகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ரகமான வறட்சியினை தாங்கி வளரக்கூடியதும், ஆண்டுக்கு 183 காய்கள் காய்ப்பு திறனும், 66 சதவீதம் எண்ணெய் சத்துமுள்ள ‘ஏஎல்ஆர் சிஎன்-1’ என்ற நெட்டை ரகம் 2002-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. கர்நாடக மாநிலம் திப்தூர் ரகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட மற்றொரு ரகமான ஏஎல்ஆர் சிஎன்-2’ நெட்டை, ஆண்டுக்கு சராசரியாக 109 தேங்காய்கள் காய்க்கும் திறனுடையது. ஒரு தேங்காயில் 136 கிராம் கொப்பரை பருப்பை கொண்டது. 64 சதவீதம் எண்ணெய் சத்துடைய இது 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இளநீருக்கு உலக அளவில் மிகப்பெரிய விற்பனை சந்தை உள்ளதால், இளநீர் ரகத்தை சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்ட தொடங்கினர். விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்ய, தேர்தெடுக்கப்பட்ட ‘கென்தாலிக்' ரக தென்னையில் இருந்து, ஆழியாறு ஆராய்ச்சி நிலையத்தில், இளநீருக்கான சிறப்பு ரகமாக, ‘ஏஎல்ஆர் சிஎன்-3’ 2012-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆண்டுக்கு சராசரியாக 86 இளநீர் காய்கள் காய்க்கும். இந்த இளநீரில் 450 மில்லி லிட்டர் வரையிலும் தண்ணீரும், அதில் 190 மில்லி கிராம் பொட்டாஷ், 5.2 சதவீதம் சர்க்கரை சத்துக்களும் அடங்கியுள்ளன.
பொள்ளாச்சி பகுதியில் இருந்து தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் தினசரி 4 லட்சம் இளநீர் காய்கள் விற்பனைக்கு அனுப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் இந்தாண்டு ‘ஏஎல்ஆர் -4’ என்னும் புதிய ரகத்தை வெளியிட்டுள்ளது. நெட்டை ரகமான இது இளநீருக்கும், கயிறு தொழிற்சாலைக்கும் ஏற்றதாக இருக்கும். இந்த ரக இளநீருக்கு மட்டும் 15 ஆயிரம் தென்னங்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், நறுமணம் உடைய இளநீர், இளஞ்சிவப்பு இளநீர் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அத்துடன் தென்னையில் ஊடுபயிராக பழச்சாகுபடி குறித்து ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT