Published : 02 Sep 2025 08:58 AM
Last Updated : 02 Sep 2025 08:58 AM
புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப் அறிவித்த 50% வரி விதிப்பு அமலானது முதல் இந்தியாவின் ஆயத்த ஆடைகளுக்கான ஏற்றுமதி கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கவிருக்கும் நேரத்தில் அமலுக்கு வந்துள்ள இந்த வரிவிதிப்பு திருப்பூர், நொய்டா, லூதியானா மற்றும் நாட்டின் பிற ஜவுளி நகரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இங்குள்ள ஏற்றுமதியாளர்கள்தான் போலோ சர்ட்ஸ், ரிசார்ட் உடைகள், கப்டான் வரை அமெரிக்காவில் உள்ள உலகளாவிய பிராண்டுகளுக்கு தேவையான அனைத்தையும் வழங்குகின்றனர். இந்த நிலையில் கூடுதல் வரிவிதிப்பால் அமெரிக்கர்கள் ஆர்டர்களை நிறுத்திவிட்டனர். இதனால் வரிவிதிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய ஏற்றுமதியாளர்கள் தற்போது வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த இக்கட்டான நெருக்கடிக்கு மத்தியில் டீஸ்ட்ரா லைப்ஸ்டைலின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) வசந்த் மாரிமுத்து தனது வணிகத்தை அமெரிக்காவில் இரட்டிப்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். டி-சர்ட் மற்றும் சிறிய அளவிலான ஆடைகளில் நிபுணத்துவம் பெற்ற அவரது நிறுவனம் வரி உயர்வால் சோர்ந்து போகாமல் வாடிக்கையாளர்களுக்கு மாதிரிகளை அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஊடகங்களில் மாரிமுத்து கூறுகையில், ``வணக்கம் மிஸ்டர் ட்ரம்ப்- அமெரிக்காவுக்கு எங்களது அடுத்த மாதிரியை ஏற்றுமதி செய்வதற்கு தயாராக உள்ளோம். அமெரிக்காவில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். அதுதான் எங்கள் பொருட்களில் நாங்கள் கொண்டு வரும் மதிப்பு. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
உலகளவில் ஜவுளி மற்றும் ஆடைகள் ஏற்றுமதியில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. 2024-ம் நிதியாண்டில் 34.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. ட்ரம்பின் கூடுதல் 25 சதவீத வரி விதிப்பு இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா ஆண்டுக்கு 22,000 மில்லியன் ஆடைகளை உற்பத்தி செய்கிறது. இதனால், லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT