Published : 02 Sep 2025 12:54 AM
Last Updated : 02 Sep 2025 12:54 AM
சென்னை: சென்னையில் ஒரே நாளில் ரூ.680 அதிகரித்து, தங்கம் பவுன் விலை முதல்முறையாக ரூ.77 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை காரணமாக தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால், பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளவர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்து வருவதுடன், தங்கத்தில் முதலீடும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தங்கத்தின் விலையும் அதிகரித்து கொண்டே வருகிறது.
கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர், போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து ஆக.8-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.75,760 என்ற உச்சத்தை அடைந்தது.
பின்னர், ஏற்ற, இறக்கமாக இருந்த நிலையில், தங்கத்தின் விலை கடந்த ஆக.25-ம் தேதி முதல் தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி, வரலாற்றில் முதல்முறையாக ஆக.29-ம் தேதி தங்கம் பவுன் விலை ரூ.76 ஆயிரத்தை கடந்து நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதன் தொடர்ச்சியாக, 2 நாட்கள் ரூ.76,960-ல் நின்று கொண்டிருந்த தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்து பவுன் ரூ.77 ஆயிரத்தை முதல்முறையாக எட்டியது. அதன்படி, நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.680 அதிகரித்து, ரூ.77,640-க்கும், கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ரூ.9,705-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் ரூ.84,696-க்கு விற்கப்பட்டது. கடந்த ஆக.27-ம் தேதி பவுன் ரூ.75,120-க்கு விற்கப்பட்ட நிலையில், கடந்த 5 நாட்களில் மட்டும் ரூ.2,520 உயர்ந்துள்ளது.
இப்படி தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, வெள்ளியும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ரூ.136-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,000 உயர்ந்து, ரூ.1.36 லட்சத்துக்கும் விற்கப்பட்டது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 50 சதவீத வரி காரணமாக, இதுவரை இல்லாத வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதே தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT