Published : 01 Sep 2025 02:12 AM
Last Updated : 01 Sep 2025 02:12 AM
புதுடெல்லி: அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் பெப்சி, கோக-கோலா, மெக்டொனால்ட்ஸ், கேஎப்சி உள்ளிட்ட அமெரிக்க தயாரிப்புகளை இந்தியர்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. இது உலக நாடுகளுக்கு விதிக் கும் மிக அதிகபட்ச வரி ஆகும். இதனால் இந்திய பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தியர்கள் மத்தியில் அமெரிக்காவுக்கு எதிரான மனநிலை உருவாகி உள்ளது. குறிப்பாக, பெப்சி, கோக-கோலா, சப்வே, மெக்டொனால்ட்ஸ், கேஎப்சி உள்ளிட்ட அமெரிக்க தயாரிப்புகளை இந்தியர்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து யோகா குரு பாபா ராம்தேவ் கூறும்போது, “பெப்சி, கோக-கோலா, சப்வே, கேஎப்சி, மெக்டொனால்ட்ஸ் உள்ளிட்ட கடைகள் பக்கம் ஒரு இந்தியர்கூட செல்லக்கூடாது. இந்த பிராண்ட்களை பெருமளவில் புறக்கணிக்க வேண்டும். அப்படி நடந்தால் அமெரிக்கா மிகப்பெரிய இழப்பை சந்திக்கும்’’ என்றார்.
இதனிடையே, உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டுமென்றால், உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும் என இந்தியர்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார்.
அமெரிக்காவின் அதிக வரி காரணமாக, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்க பொருட்களை ஏற்கெனவே புறக்கணிக்கத் தொடங்கி விட்டன. இந்த சூழ்நிலையில், 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவும் புறக்கணிக்கும்போது அமெரிக்க நிறுவனங்கள் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும். மெக்டொனால்ட்ஸ் உணவகங்களை மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் நடத்தும் வெஸ்ட்லைப் புட்வேர்ல்டு கடந்த நிதியாண்டில் ரூ.2,390 கோடி வருவாய் ஈட்டியது. இது முந்தைய ஆண்டைவிட 5% அதிகம்.
இதுபோல பெப்சிகோ நிறுவனம் ரூ.8,200 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இந்நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.3,500 கோடியை முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT