Published : 30 Aug 2025 06:40 PM
Last Updated : 30 Aug 2025 06:40 PM
புதுடெல்லி: இந்திய பொருளாதாரத்தில் ஏற்படும் நல்ல மாற்றங்கள், அமெரிக்க வரிகளின் தாக்கத்தை ஈடு செய்யும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், "உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் பொருளாதாரத்தின் செயல்திறனை ஊக்குவிக்கும் காரணிகள் வலுவாக உள்ளன. இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரிகள் (அமெரிக்காவால்) உயர்த்தப்பட்டுள்ளதன் தாக்கம் உள்நாட்டு உற்பத்தி மற்றும் மூலதனத்தில் பரவக்கூடும். இது ஓரளவு தவிர்க்க முடியாதது என நினைக்கிறேன். அதேநேரத்தில், இரண்டாம் காலாண்டு மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் மந்தநிலை ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தப்படும். ஏனெனில், கூடுதல் வரி விதிப்பு என்பது நீண்ட காலம் நீடிக்காது என்பதே எனது பார்வை.
வரி உயர்வின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும் அதை ஈடு செய்யும் நடவடிக்கைகளும் இருக்கும். இதனால், இந்திய பொருளாதாரத்தில் நல்ல மாற்றங்கள் நிகழும். இதன்மூலம், அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சார்ந்த துறைகளில் வேலை இழப்பு கட்டுப்படுத்தப்படும். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வரும் நிறுவனங்களில் சில மாற்று சந்தைகளைக் கண்டுபிடிக்கும்.
நீண்டகால நோக்கில் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை தக்கவைத்துக்கொள்ளும் முடிவை எடுக்கலாம். அதோடு, அதிக உள்நாட்டு தேவை மூலமாகவும் அத்தகைய நிறுவனங்களின் உற்பத்தி பாதுகாக்கப்படும். நமக்கு சிறந்த பருவமழைக் காலம் உள்ளது. விவசாயம் மற்றும் கிராமப்புற தேவை அதிகரிக்கும். எனவே, வேலை இழப்புகள் ஏற்பட்டால் அது பெரிய அளவில் இருக்க வேண்டிய அவசியமில்லை" என தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.8% ஆக இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் அனுராதா தாக்கூர், "முதல் காலாண்டின் எண்கள் நமது பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக இருப்பதை பிரதிபலிக்கிறது. பொருளாதாரத்தில் உத்வேகம் ஏற்பட்டு வருவதை இது பிரதிபலிக்கிறது. வலுவான பெரிய பொருளாதார அடிப்படைகளில் நமது பொருளாதாரம் நங்கூரமிட்டிப்பதை இது காட்டுகிறது.
உற்பத்தி, விநியோகம், கட்டுமானம், சேவை செயல்பாடுகளில் வலுவான வளர்ச்சி நிலவுகிறது. விவசாயமும் வளர்ச்சிப் பாதையில் உள்ளது. அறுவடை மற்றும் விதைப்பு இரண்டுமே கடந்த காலாண்டைவிட அதிகமாக உள்ளது. நல்ல மழைப்பொழிவு கிடைத்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT