Last Updated : 29 Aug, 2025 03:27 PM

 

Published : 29 Aug 2025 03:27 PM
Last Updated : 29 Aug 2025 03:27 PM

அமெரிக்க வரி விதிப்பு தாக்கம்: கடல் உணவு ஏற்றுமதி 50% குறைந்தது!

அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் கடல் உணவு ஏற்றுமதி 50 சதவீதம் குறைந்துள்ளது. தமிழக கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்தியாவின் ஏற்றுமதியில் கடல் உணவு முக்கிய இடத்தில் உள்ளது. கடந்த 2023-2024-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பிய நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரூ.60,523 கோடி மதிப்பில், 17 லட்சத்து 81 ஆயிரத்து 602 டன் அளவுக்கு பதப்படுத்தப்பட்ட இறால், மீன், கணவாய், நண்டு உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டன. இதில், அமெரிக்காவுக்கு மட்டும் ரூ.20,892 கோடி மதிப்பிலான 3 லட்சத்து 29 ஆயிரத்து 192 டன் கடல் உணவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக மட்டும் கடந்த 2023-3024-ம் ஆண்டு ரூ.3,214 கோடி மதிப்பிலான 73 ஆயிரத்து 822 டன் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்கு இறால்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆண்டு கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதி குறைந்துள்ளது. அதனை ஈடுகட்டும் வகையில் அமெரிக்காவுக்கு பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதனால், கடல் உணவு ஏற்றுமதிக்கு அமெரிக்கா நல்ல சந்தையாக விளங்கி வருகிறது.

அமெரிக்காவுக்கு கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் சுமார் 25 நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 15 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தூத்துக்குடியில் இருந்து பதப்படுத்தப்பட்ட இறால், கணவாய், மீன், நண்டு உள்ளிட்ட மாதம் 20 கண்டெய்னர்களில் கடல் உணவு பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளதால் கடல் உணவு ஏற்றுமதி கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தூத்துக்குடி கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது:

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவு பொருட்களில் 30 முதல் 40 சதவீதம் வரை தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப் படுகின்றன. அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், ஏற்றுமதி சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. கடல் உணவுகளை நீண்ட நாட்கள் இருப்பு வைக்க முடியாது. மத்திய அரசு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x