Published : 29 Aug 2025 07:14 AM
Last Updated : 29 Aug 2025 07:14 AM
புதுடெல்லி: வரும் 2038-ல் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் 2-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என எர்ன்ஸ்ட் அன்ட் யங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எர்ன்ஸ்ட் அன்ட் யங் ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் வலுவான பொருளாதார கட்டமைப்பு, சாதகமான மக்கள் தொகை மற்றும் தொடர்ச்சியான தொழில் துறை சீர்திருத்தங்கள் ஆகியவை நீண்டகால வளர்ச்சியை ஊக்குவிப்பதாக உள்ளன. குறிப்பாக, அதிக இளைஞர் சக்தி (சராசரி வயது 28.8), பொதுமக்களின் அதிக சேமிப்பு மற்றும் முதலீட்டு விகிதம், அரசின் கடன் மற்றும் ஜிடிபி இடைவெளி குறைந்து வருவது, சீரான பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்தியாவுக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்தியா இப்போது 4.19 ட்ரில்லியன் டாலர் ஜிடிபியுடன் (வாங்கும் சக்தி அடிப்படையில்) உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. இது விரைவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுப்பதுடன், 2030 வாக்கில் 20.7 ட்ரில்லியன் டாலரை எட்டும். வரும் 2030 வரையில் இந்தியாவின் ஜிடிபி சராசரியாக ஆண்டுக்கு 6.5% ஆகவும் அமெரிக்காவின் ஜிடிபி 2.1% ஆகவும் இருக்கும் என ஐஎம்எப் கணித்துள்ளது. இது 2030-க்கு பிறகும் தொடர்ந்தால், வரும் 2038-ம் ஆண்டுக்குள் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் ஜிடிபி 34.2 ட்ரில்லியன் டாலரை எட்டி உலகின் 2-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT