Last Updated : 28 Aug, 2025 09:27 PM

 

Published : 28 Aug 2025 09:27 PM
Last Updated : 28 Aug 2025 09:27 PM

அமெரிக்க வரி நெருக்கடி: தமிழக ஜவுளித் துறை மீள்வது சாத்தியமே... எப்படி?

கோவை: ஏற்றுமதியைவிட உள்நாட்டு ஜவுளி வணிகம் 3 மடங்கு அதிகம். எனவே, மத்திய, மாநில அரசுகள் உதவினால், அமெரிக்காவின் வரி நெருக்கடியில் இருந்து மீள்வோம் என்று ஜவுளித் தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தென்னிந்திய மில்கள் சங்கத் (சைமா) தலைவர் எஸ்.கே.சுந்தரராமன் கூறும்போது, “அமெரிக்கா, இந்தியா மீது விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பு ஏற்புடையதல்ல. அதிர்ச்சிகரமானது. இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

தொழில் துறையினருக்கு நிதியுதவி, சலுகைகள், வேறு நாடுகளில் ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து செயல்பட உதவி செய்தல் போன்ற நடவடிக்கைகள் அவசியமாகும். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியை ஒப்பிடும்போது உள்நாட்டு ஜவுளி வணிகம் 3 மடங்கு அதிகமாகும். தற்போது நிலவும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.

இந்திய ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் (சிட்டி) முன்னாள் தலைவர் ராஜ்குமார் கூறும்போது, “நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கு செப்.30 வரை வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், மிகவும் குறுகிய கால சலுகை என்பதால், நடைமுறை சிக்கல்களை எடுத்துக்கூறி, சலுகையை நீட்டித்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதை ஏற்று தற்போது மத்திய அரசு டிச.31 வரை சலுகையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்நடவடிக்கை நூற்பாலைத்துறைக்கு மட்டுமின்றி, ஆயத்த ஆடை, பின்னலாடை உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் உதவும்” என்றார்.

மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின்(ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறும்போது, “ஜவுளித் தொழில் மட்டுமின்றி, அனைத்து துறைகளிலும் பொருட்கள் உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப் பொருட்களின் விலை சர்வதேச விலையில் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல, ஏதேனும் ஒரு துறை பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது, அதை சார்ந்துள்ள தொழில்துறையினர் நெருக்கடியில் இருந்து மீண்டு வர அரசு தேவையான சலுகைகளை வழங்க வேண்டும். 2022 முதல் ஜவுளித் துறை பல்வேறு காரணங்களால் நெருக்கடியில் செயல்பட்டு வருகிறது. எனவே, தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளால் தற்காலிக தீர்வு மட்டுமே கிடைக்கும். நிரந்தரத் தீர்வு கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

இந்திய பருத்தி கூட்டமைப்பு (ஐசிஎஃப்) தலைவர் துளசிதரன் கூறும்போது, “பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கு தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. மிகவும் நெருக்கடியான சூழலில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை தொழில்துறையினருக்கு மிகவும் உதவும்” என்றார்.

தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கத் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறும்போது, “அமெரிக்காவின் வரி விதிப்பால் திருப்பூர், கரூர் ஏற்றுமதி ஜவுளித் தொழிலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்குதல், மூலப்பொருட்கள் வாங்குவதற்கான மூலதனத்துக்கு 5 சதவீத வட்டி மானியம் வழங்குதல், செயற்கை இழை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடுகளை நீக்குதல் போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு மின் கட்டணத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.2 வரை மானியம் வழங்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x