Published : 28 Aug 2025 11:34 AM
Last Updated : 28 Aug 2025 11:34 AM
மும்பை: விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு பின்னர் இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் இன்று (ஆக.28) காலை மீண்டும் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் கடும் வீழ்ச்சியை கண்டன.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை (ஆக.27) அமலுக்கு வந்தது. ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியோடு இந்த கூடுதல் 25 சதவீதமும் சேர்ந்துள்ள நிலையில், 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும். இதனால், தொழிலாளர் சார்ந்த துறைகள் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியது முதல் சரிவு கண்டது. முந்தைய வர்த்தக நாளான கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 2.66 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்திருந்ததாக தகவல்.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சுமார் 600+ புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. காலை 9.30 மணி நிலவரப்படி சுமார் 1 சதவீதம் வீழ்ச்சியை எட்டி 80,093.52 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகம் ஆனது. மும்பை பங்குச் சந்தையின் ஒட்டுமொத்த மூலதனம் ரூ.449 லட்சம் கோடியில் இருந்து ரூ.445 லட்சம் கோடி என சரிந்தது.
இதேபோல தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி, இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சுமார் 1 சதவீதம் என்ற அளவில் சரிவைக் கண்டு 24,507.20 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆகிறது. அமெரிக்க வரி விதிப்பின் தாக்கம் காரணமாக பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT