Published : 27 Aug 2025 02:57 PM
Last Updated : 27 Aug 2025 02:57 PM
நியூயார்க்: எதிர்வரும் செப்டம்பர் 9-ம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்வு நடைபெறும் என அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் ஐபோன் 17 சீரிஸ் போன்கள் உட்பட பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 17 சீரிஸ் வரிசையில் ஐபோன் 17, ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் என நான்கு மாடல் போன்கள் அறிமுகமாக உள்ளன. ஐஓஎஸ் 26 இயங்குதளத்தில் இந்த போன்கள் வெளியாக உள்ளன. இது ஐபோன் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதில் ஐபோன் 17 ஏர் ஆப்பிள் ஐபோன்களில் புதிய வேரியன்ட்டாக அறிமுகமாக உள்ளது. இந்த முறை ஐபோன் பிளஸ் வேரியன்ட் வெளிவராது என தெரிகிறது. ஐபோன் 17 புரோ மற்றும் 17 புரோ மேக்ஸ் போன்களை பொறுத்தவரை கேமரா Module ரீ-டிசைன் செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
இந்த முறை ஐபோன் 17 போன்களின் விலை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அமெரிக்க நாட்டின் வரி விதிப்பு காரணமாக இருக்கும். இந்திய ரூபாய் மதிப்பில் ஐபோன் 17 மாடல்களின் விலை ரூ.89,000 முதல் தொடங்கும் என தகவல்.
ஐபோன் 17 சீரிஸ் போன்களுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மற்றும் ஏர்பாட்ஸ் புரோ 3 உள்ளிட்ட சாதனங்களும் அறிமுகமாக உள்ளன. ஆப்பிள் இண்டலிஜென்ஸும் இந்த முறை அப்டேட் உடன் வெளியாகும் என தகவல்.
“செப்டம்பர் 9-ம் தேதி, செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் அற்புதமான ஆப்பிள் நிகழ்வுக்கு தயாராகுங்கள்” என ஆப்பிள் சிஇஓ டிம் குக் தெரிவித்துள்ளார். இந்திய நேரப்படி செப்டம்பர் 9-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT