Published : 27 Aug 2025 12:27 AM
Last Updated : 27 Aug 2025 12:27 AM

உலகம் முழுவதும் இந்திய மின்சார கார்கள் கோலோச்சும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

ஹன்சல்பூர்: உல​கம் முழு​வதும் இந்​திய மின்​சார கார்​கள் கோலோச்​சும் என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

குஜ​ராத்​தின் ஹன்​சல்​பூரில் மாருதி நிறு​வனத்​தின் ஆலை அமைந்​துள்​ளது. இது 640 ஏக்​கர் பரப்​பளவு கொண்​டது. அங்கு இ-வி​டாரா மின்​சார கார் உற்​பத்தி தொடங்​கப்​பட்டு உள்​ளது. ஹன்​சல்​பூர் ஆலை​யில் தயாரிக்​கப்​பட்ட முதல் இ-வி​டாரா மின்​சார காரை பிரதமர் மோடி நேற்று கொடியசைத்து தொடங்​கி​வைத்​தார்.

இதன்​பிறகு நடை​பெற்ற கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: இந்​தி​யா​வில் தயாரிப்​போம், உலகத்​துக்​காக தயாரிப்​போம் என்ற திட்​டத்​தில் முக்​கிய மைல்​கல்லை நாம் எட்டி உள்​ளோம். இந்த ஆலை இந்​தி​யா, ஜப்​பான் இடையி​லான நட்​புற​வின் சின்​ன​மாக விளங்​கு​கிறது. இப்​போது உலகத்​தின் பல்​வேறு நாடு​களில் ஓடும் மின்​சார கார்​கள் இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்​டவை ஆகும். இதில் மிகுந்த பெரு​மிதம் கொள்​கிறேன். ஹன்​சல்​பூர் மாருதி சுசூகி ஆலை​யில் தயாரிக்​கப்​படும் இ-வி​டாரா கார் உலகம் முழு​வதும் 100 நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யப்பட உள்​ளது. விரை​வில் உலகம் முழு​வதும் இந்​திய மின்​சார கார்​கள் கோலோச்​சும்.

மின்​சார கார் உற்​பத்​திக்கு தேவை​யான பேட்​டரி​கள் இப்​போது உள்​நாட்​டிலேயே தயாரிக்​கப்​படு​கிறது. குறிப்​பாக ஹன்​சல்​பூர் மாருதி சுசூகி ஆலை​யிலேயே ஹைபிரிட் பேட்​டரி உற்​பத்தி செய்​யப்​படு​கிறது. பழைய பெட்​ரோல், டீசல் வாக​னங்​கள், ஆம்​புலன்​ஸ்​களை ஹைபிரிட் மின்​சார வாக​னங்​களாக மாற்​றும் தொழில்​நுட்​பத்தை உரு​வாக்​கு​மாறு மாருதி சுசூகி நிறு​வனத்தை கேட்​டுக் கொண்​டேன். இதை சவாலாக ஏற்று 6 மாதங்​களில் ஹைபிரிட் மின்​சார ஆம்​புலன்ஸ் வாக​னத்​துக்​கான மாதிரியை அந்த நிறு​வனம் வடிவ​மைத்து உள்​ளது. நாடு முழு​வதும் ஓடும் பழைய வாக​னங்​கள், ஹைபிரிட் மின்​சார வாக​னங்​களாக மாற்​றப்​பட்​டால் காற்று மாசு கணிச​மாக குறை​யும்.

மின்​சார ஆம்​புலன்ஸ் வாக​னங்​களுக்​காக பிஎம் இ-டிரைவ் திட்​டம் தொடங்​கப்​பட்டு உள்​ளது. இந்த திட்​டத்​துக்​காக ரூ.11,000 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்டு உள்​ளது. அடுத்த கட்​ட​மாக செமி கண்​டக்​டர் துறை​யில் அதிதீ​விர கவனம் செலுத்தி வரு​கிறோம். நாடு முழு​வதும் 6 செமி கண்​டக்​டர் ஆலைகள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்த எண்​ணிக்கை படிப்​படி​யாக அதி​கரிக்​கப்​படும். செமி கண்​டக்​டர் துறை​யிலும் இந்​தியா சாதனை படைக்​கும். அந்​நிய முதலீட்​டாளர்​களை ஈர்ப்​ப​தில் மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்த வேண்​டும். அப்​போது​தான் 2047-ம் ஆண்​டில் வளர்ச்சி அடைந்த இந்​தியா என்ற இலக்கை எட்​டிப் பிடிக்க முடி​யும்.

உள்​நாட்​டுப் பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறேன். இதுதொடர்​பாக இப்​போது தெளி​வான விளக்​கத்தை அளிக்க விரும்​பு​கிறேன். ஜப்​பானிய நிறு​வனங்​கள் சார்​பில் இந்​தி​யா​வில் கார்​கள் உள்​ளிட்ட பல்​வேறு பொருட்​கள் உற்​பத்தி செய்​யப்​படு​கின்​றன. அந்த பொருட்​களும் இந்​திய தயாரிப்​பு​கள்​தான். அவை இந்​திய மண்​ணில், இந்​தி​யர்​களின் கடின உழைப்​பு, வியர்​வை​யால் உற்​பத்தி செய்​யப்​படு​கின்​றன. அவை 100 சதவீதம் உள்​நாட்​டுப் பொருட்​கள் ஆகும்.

ஜப்​பானை சேர்ந்த சுசூகி நிறு​வனம், இந்​தி​யா​வின் சர்​வ​தேச தூத​ராக செயல்​பட்டு வரு​கிறது. அந்த நிறு​வனத்​துக்கு மனதார பாராட்​டு​களை தெரி​வித்து கொள்​கிறேன். விரை​வில் ஜப்​பானில் அரசு முறை பயணம் மேற்​கொள்ள உள்​ளேன். அப்​போது இந்​திய, ஜப்​பான் உறவு மேலும் வலுப்​படும். இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி பேசி​னார்.

குஜ​ராத்​தின் ஹன்​சல்​பூர் ஆலை​யில் மாருதி நிறு​வனம் ரூ.21,000 கோடியை முதலீடு செய்​துள்​ளது. இந்த ஆலை​யில் ஓராண்​டில் 7.5 லட்​சம் கார்​களை உற்​பத்தி செய்ய முடி​யும். வரும் 2026-ம் ஆண்​டில் ஹன்​சல்​பூர் ஆலை​யில்​ 67,000 இ-வி​டா​ரா மின்​சா​ர கார்​களை தயாரிக்​க இலக்​கு நிர்​ணயிக்​கப்​பட்​டு இருக்​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x