Published : 26 Aug 2025 07:12 AM
Last Updated : 26 Aug 2025 07:12 AM
புதுடெல்லி: மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பிஜி பிரதமர் சிதிவேனி லிகமமடா ரபுகா, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது இருநாடுகளுக்கிடையில் பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பான 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: இந்தியா மற்றும் பிஜியின் கடல்கள் வேறுபட்டிருக்கலாம். ஆனால், எங்களின் விருப்பங்கள் ஒரு படகில் பயணிக்கின்றன. பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு பரந்த செயல் திட்டத்தை உருவாக்கிட இந்தியாவும், பிஜியும் உறுதிபூண்டுள்ளன.
இரு நாடுகளும் பாதுகாப்பான மற்றும் வளமான இந்திய-பசிபிக் பிராந்தியத்தை ஆதரிக்கின்றன. பிரதமர் ரபுகா இந்தியாவுக்கு முதன்முறையாக வருகை தந்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக இருதரப்பினரும் ஏழு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். பாதுகாப்பு துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதற்கான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த தேவையான பயிற்சி மற்றும் உபகரணங்களை இந்தியா வழங்கும். பருவநிலை மாற்றம் பிஜி நாட்டுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பேரிடரை சமாளிக்க தேவையான அனைத்து உதவிகளும் இந்தியா சார்பில் வழங்கப்படும். இவ்வாறு பிரதமர் கூறினார்.
கடல்சார் பாதுகாப்புத் துறையில் பிஜி, இந்தியாவிற்கு ஒரு முக்கியமான நாடு. பசிபிக் பிராந்தியத்தில் சீனா தனது பலத்தை அதிகரிக்க இடைவிடாமல் முயற்சிக்கும் பின்னணியில், பிஜியுடன் தனது பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT