Published : 25 Aug 2025 07:10 PM
Last Updated : 25 Aug 2025 07:10 PM
புதுடெல்லி: நாட்டில் பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் 2023-24 நிதி ஆண்டில் 40.3% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காலமுறை தொழிலாளர்கள் கணக்கெடுப்பு (PLFS) தரவுகளின் அடிப்படையில் மத்திய தொழிலாளர் மற்றம் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் 70% அளவிற்கு பெண் தொழிலாளர் பங்களிப்பை உறுதி செய்வது என்பது 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கான முக்கியத்துவங்களில் ஒன்றாகும்.
நாட்டில் தற்போது பெண்கள் பாராம்பரிய சூழலுக்குள் அடைந்துவிடாமல் தடைகளை உடைத்து நாட்டின் எதிர்கால பொருளாதாரத்தை வடிவமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளனர். ஊரகத் தொழில்முனைவோர் முதல் பெருநிறுவனங்களின் தலைவர்கள் என்ற நிலை வரை வளர்ச்சியடைந்த பாரதத்தையொட்டிய இந்தியாவின் அணிவகுப்பில் பெண்கள் தலைமை வகிக்கின்றனர்.
நாட்டில் பெண் தொழிலாளர்கள் பங்களிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் 2017-18-ம் ஆண்டில் 22%-மாக இருந்த நிலையில் 2023-24-ம் ஆண்டு 40.3% அதிகரித்துள்ளது. இந்நிலையில் வேலையில்லாதோர் விகிதம் இதே காலக்கட்டத்தில் 5.6%-லிருந்து 3.2%-மாக குறைந்துள்ளது.
ஊரகப் பகுதிகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 96%-ம் நகரப்புற பகுதிகளில் 43%-ம் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. பெண் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு 2013-ம் ஆண்டு 42%-மாக இருந்த நிலையில் 2024-ம் ஆண்டு 47.53% அதிகரித்துள்ளது. முதுநிலை பெண் பட்டதாரிகளின் வேலை வாய்ப்பு விகிதம் 2017-18-ம் ஆண்டில் 34.5% என்ற நிலையிலிருந்து 2023-24-ம் ஆண்டில் 40%-மாக அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் 1.56 கோடி பெண்கள் அமைப்புசார் பணிகளில் சேர்ந்துள்ளனர். முத்ரா கடன்களில் 68% கடன்களை பெண்கள் பெற்றுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT