Published : 24 Aug 2025 10:48 AM
Last Updated : 24 Aug 2025 10:48 AM
ஐ.சி.எஃப். ஆலையில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில், சென்னையில் இருந்து ஹரியானாவுக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. இந்த ரயிலை, அடுத்த சில மாதங்களுக்கு பல்வேறு கட்ட சோதனையில் ஈடுபடுத்த உள்ளனர்.
உலக புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான சென்னை ஐ.சி.எஃப் ஆலையில், வந்தே பாரத் ரயில், எல்எச்பி பெட்டிகள் கொண்ட ரயில், மெட்ரோ ரயில், அம்ரித் பாரத் ரயில் உள்பட பல்வேறு ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன.
இதற்கிடையில், இங்கு நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் ரூ.118 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், நீராவியை மட்டுமே வெளியிடுவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. மின்சாரத்தில் இயங்கும் ரயிலை விட, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்புக்கு உகந்தது. முக்கிய நகரங்களில் இருந்து, குறுகிய துாரத்துக்கு மட்டுமே, தற்போது இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 50 முதல் 80 கி.மீ. தூரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயிலில் 10 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 84 பேர் பயணம் செய்யலாம். ரயில் இன்ஜின் 1,200 குதிரை திறன் கொண்டது, அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும். இந்நிலையில், இந்த ரயில் வேறொரு இன்ஜினில் இணைக்கப்பட்டு, சென்னையில் இருந்து ஹரியானாவுக்கு நேற்று அதிகாலை கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து, ஐ.சி.எஃப் அதிகாரிகள் கூறியதாவது: ரயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி, பல்வேறு கட்ட சோதனை நடத்தப்படும். சோதனை இறுதி செய்த பிறகு, ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் ஒப்புதல் பெறப்படும். பிறகு, ஹரியானா மாநிலம் சோனிபேட் – ஜிந்த் இடையே சில வாரங்களுக்கு வெறும் ரயில் மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் இயக்கம், பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்த பிறகு, பயணிகளின் சேவைக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT