Published : 24 Aug 2025 06:45 AM
Last Updated : 24 Aug 2025 06:45 AM
புதுடெல்லி: உடல் பருமனைக் குறைப்பது தொடர்பாக தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை அளித்ததாக விஎல்சிசி நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்(சிசிபிஏ) ரூ.3 லட்சம் அபராதத்தை விதித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: விஎல்சிசி அழகு நிலைய நிறுவனம், கொழுப்பை குறைத்தல், உடல் பருமனைக் குறைத்தல் போன்ற சிகிச்சைக்காக தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. யுஎஸ்-எப்டிஏ அனுமதியளித்த உடல் பருமனைக் குறைக்கும் கருவிகளைக் கொண்டு உடலை ஒல்லியாக்குவோம் என அவர்கள் விளம்பரம் செய்திருந்தனர்.
இதுதொடர்பாக மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்தக் கருவி மூலம் உடனடியாக உடல் பருமனைக் குறைக்க முடியாது என்றும், அந்த விளம்பரமானது நுகர்வோருக்குத் தவறான தகவல்களைத் தருகிறது என்றும் தெரியவந்தது. இதையடுத்து ரூ.3 லட்சம் அபராதத்தை விஎல்சிசி நிறுவனத்துக்கு சிசிபிஏ விதித்துள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT