Published : 21 Aug 2025 06:58 AM
Last Updated : 21 Aug 2025 06:58 AM
புதுடெல்லி: இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.62,000 கோடி மதிப்பில் 97 தேஜஸ் மார்க் 1ஏ ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. விமானப்படையில் உள்ள பழைய மிக் -21 ரக போர் விமானங்களுக்கு மாற்றாக உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் இலகு ரக போர் விமானங்கள் சேர்க்கப்படுகின்றன.
விமானப்படையில் ஏற்கெனவே 40 தேஜஸ் போர் விமானங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. அதன்பின்பு ரூ.48,000 கோடி மதிப்பில் 83 தேஜஸ் மார்க் 1ஏ ரக விமானங்களை வாங்க மத்திய அரசு ஆர்டர் கொடுத்தது. இந்த விமானங்களுக்கான இன்ஜினை வழங்குவதில், அமெரிக்கா தாமதம் செய்ததால், இதன் விநியோகம் குறித்த நேரத்தில் நடைபெறவில்லை.
இதுகுறித்து விமானப்படை தளபதி ஏற்கெனவே அதிருப்தி தெரிவித்திருந்தார். அமெரிக்காவிடம் இருந்து விமான இன்ஜின் வந்ததும் தேஜஸ் போர் விமானங்கள் விநியோகிக்கப்படும் என எச்ஏஎல் நிறுவனம் உறுதியளித்தது. தேஜஸ் போர் விமானங்களின் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டாலும், ஏச்ஏஎல் நிறுவனத்தின் உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்.
அவரும் தேஜஸ் பயிற்சி விமானத்தில் பறந்தார். இந்நிலையில் தற்போது ரூ.62,000 கோடி மதிப்பில் மேலும் 97 தேஜஸ் மார்க் 1ஏ ரக போர் விமானங்களை எச்ஏஎல் நிறுவனம் தயாரிக்க மத்திய அரசு இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 65 சதவீதத்துக்கும் மேல் உள்நாட்டு தயாரிப்பு பொருட்கள் பயன்படுத்தப்படவுள்ளன. 200 தேஜஸ் மார்க் 2ஏ ரக போர் விமானங்கள் மற்றும் 5-ம் தலைமுறை போர் விமானங்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களை பெறவும் எச்ஏஎல் நிறுவனம் தயாராகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT