Last Updated : 18 Aug, 2025 09:14 PM

 

Published : 18 Aug 2025 09:14 PM
Last Updated : 18 Aug 2025 09:14 PM

நாளொன்றுக்கு 2 மில்லியன் பீப்பாய்: ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி!

சென்னை: நடப்பு ஆகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாட்களில் ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் நாளொன்றுக்கு 2 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தங்களது கொள்முதல் சார்ந்த விவகாரத்தில் பொருளாதார ரீதியான முன்னுரிமையை தொடர்ந்து அளித்து வருவது இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

ஆகஸ்ட் (2025) மாதத்தின் முதல் பாதியில் நாளொன்றுக்கு சுமார் 5.2 பில்லியன் பீப்பாய் என்ற அளவில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி இருந்துள்ளது. இதில் சுமார் 38 சதவீதம் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இதை நிகழ் நேரத்தில் உலகளாவிய தகவலை வழங்கும் Kpler எனும் பகுப்பாய்வு தரவு நிறுவனம் வழங்கியுள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் நாளொன்றுக்கு 1.6 மில்லியன் பீப்பாய்களாக இருந்துள்ளது. இதனால் ஈராக் மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் நாளொன்றுக்கு 7.30 லட்சம் மற்றும் 5.26 லட்சம் பீப்பாய்களாக குறைந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் 2.64 லட்சம் என உள்ளது. இதை Kpler தரவுகள் தெரிவித்துள்ளன. இந்தியாவின் எண்ணெய் கொள்முதலில் அமெரிக்கா 5-ம் இடத்தில் உள்ளது.

"அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு நடவடிக்கைக்கு மத்தியில் ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்தியா மீதான வரி விதிப்பு கொள்கையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜூலை இறுதியில் அறிவித்தார். ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டும் என அவர் பகரிங்கமாக அறிவித்தார்.

ஆனால், ரஷ்யாவில் இருந்து ஆகஸ்ட் மாதத்துக்கான எண்ணெய் கொள்முதல் சார்ந்த முடிவு ஜூன் மற்றும் ஜூலை தொடக்கத்தில் எடுக்கப்பட்டதாகும். இது வரி விதிப்பு மாற்றத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவாகும். அமெரிக்க வரி விதிப்பின் தாக்கம் இந்தியாவின் எண்ணெய் கொள்முதலில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது செப்டம்பர் இறுதி மற்றும் அக்டோபரில் தான் தெரியவரும்" என வர்த்தக நிபுணர் சுமித் ரித்தோலியா கூறியுள்ளார்.

மேலும், ரஷ்யாவில் இருந்து இறக்குமதியை குறைக்குமாறு அரசு தரப்பில் இருந்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதனால் எண்ணெய் இறக்குமதி சார்ந்த வர்த்தகம் வழக்கம் போல இருக்கும் என எதிர்பார்ப்பதாக துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் கச்சா எண்ணெய் நுகர்வு சார்ந்த பயன்பாடு மற்றும் இறக்குமதியில் டாப் 3 பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. கடந்த 2022 முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் உலக நாடுகள் பொருளாதார ரீதியான தடையை ரஷ்யாவுக்கு அறிவித்தன. இந்த சூழலில் தள்ளுபடி விலையில் ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி மேற்கொண்டு வருகிறது.

உக்ரைன் போருக்கு முன்பு 0.2 சதவீதம் என ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது. போருக்கு பின்பு அந்த சதவீதம் 35 முதல் 40 என உள்ளது. இந்த தள்ளுபடி பீப்பாய் ஒன்றுக்கு அதிகபட்சம் 40 டாலர் முதல் குறைந்தபட்சம் 1.5 டாலர் வரையில் உள்ளதாக தகவல். நடப்பு மாதத்தில் பீப்பாய் ஒன்றுக்கு 2 டாலர் தள்ளுபடி என்ற விலையில் இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x