Published : 18 Aug 2025 01:37 PM
Last Updated : 18 Aug 2025 01:37 PM

மகளிர் சுய உதவிக்குழு மூலம் பஞ்சகவ்ய விநாயகர் சிலைகள் விற்பனை

மதுரையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழு மூலம் பஞ்சகவ்ய விநாயகர் சிலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் வரும் 27-ம் தேதி விநாயகர் சதூர்த்தி தமிழக மக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை இல்லங்களிலும், வீதிகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதும், 3 அல்லது 5 தினங்களுக்குப் பின்னர் அவற்றை எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதும் வழக்கம்.

இந்நிலையில், களிமண்ணால் செய்யப்பட்ட, 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக், தெர்மாகோல்' கலவையற்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே, பாதுகாப்பான முறையில் நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதனால், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கான ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர்க்கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்து கின்றனர்.

தற்போது மதுரையில் பஞ்சகவ்யம் மூலம் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பஞ்சகவ்யம் என்பது பசுமாட்டின் சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகிய 5 பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு இயற்கை கலவையாகும். இது விவசாயத்தில் உரமாக மட்டுமல்லாது ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தயாரிக்கப்படும் விநாயகர் சிலையால் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படாமலும், நல்ல உரமாகவும் பயன்படுகிறது.

இதுகுறித்து, மதுரை ஒத்தக்கடையில் வசிக்கும் மந்தையம்மன் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பூர்ணிமா தேவி கூறுகையில், பஞ்சகவ்யத் தில் விளக்கு, விநாயகர் சிலை, முகப்பூச்சு பவுடர் ஆகியவற்றை செய்து விற்பனை செய்து வருகிறோம். பஞ்சகவ்ய விளக்கு 108 ஹோமப் பொருட்களைக் கொண்டு செய்யப்படுகிறது. விளக்குத் திரி பஞ்சகவ்ய கரைசல் கொண்டு செய்யப்படுகிறது.

இந்த மாத இறுதியில் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் முதன்முறையாக பஞ்சகவ்யத்தில் விநாயகர் சிலைகள் செய்து விற்பனை செய்து வருகிறோம். மகளிர் திட்டம் மூலம் நடைபெறும் கண்காட்சிகளில் இச்சிலைகள் விற்பனை செய்து வருகிறோம். விநாயகர் சிலை மற்றும் பூஜைக்கு தேவையான எண்ணெய், பன்னீர், சந்தணம், குங்குமம் உள்ளிட்ட 15 பொருட்கள் ரூ.499-க்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறோம். மேலும், தனியாக ‘பரிபூர்ணா பெண்கள் உலகம்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறேன். அதன் மூலமாகவும் மக்கள் தொடர்பு கொண்டு இந்த பொருட்களைப் பெற்றுக் கொள்கின்றனர், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x