Published : 18 Aug 2025 11:23 AM
Last Updated : 18 Aug 2025 11:23 AM
மும்பை: சுதந்திர தினம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பின்னர் இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் இன்று (ஆக.18) காலை மீண்டும் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் ஏற்றம் கண்டன.
டெல்லி - செங்கோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசத்தின் 79-வது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக அறிவித்தார். இது நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது.
இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியது முதல் ஏற்றம் கண்டது. ஆட்டோமொபைல், நுகர்வோர் பொருட்கள் சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் ஏற்றமடைந்தன.
திங்கட்கிழமை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சுமார் 1,000+ புள்ளிகள் ஏற்றம் கண்டது. வியாழக்கிழமை அன்று 80,597.66 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்திருந்தது. இந்த நிலையில் சென்செக்ஸ் புள்ளிகள் சுமார் 1.16 சதவீதம் ஏற்றம் கண்டு, தற்போது 81,529 என வர்த்தகம் ஆகிறது. இதனால் மாருதி, பஜாஜ் பைனான்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, அல்ட்ரா டெக், டிரென்ட் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனங்கள் பலன் அடைந்துள்ளதாக வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி, கடந்த வியாழக்கிழமை அன்று 24,631 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சுமார் 300+ புள்ளிகள் ஏற்றம் கண்டது. காலை 11 மணி நிலவரப்படி 24,954 புள்ளிகளை நிஃப்டி எட்டி இருந்தது. இது முந்தைய நாள் வர்த்தக முடிவோடு ஒப்பிடும் போது சுமார் 1.32 சதவீதம் அதிகரித்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT