Published : 14 Aug 2025 01:16 PM
Last Updated : 14 Aug 2025 01:16 PM
கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதில் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு அபராதம் விதித்தல் தொடர்பாக விளக்கம் கேட்டு கோவை மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி வருவதற்கு தொழில்துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் சேவைத்துறை சார்ந்த நிறுவனத்தினர் செலுத்தி வரும் வரியினங்கள் மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி என இருபிரிவுகளாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக தொழில்துறையினர் கூறி வரும் நிலையில் சமீப காலமாக புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சிறு தொழில்கள் சங்கத்தின்(டான்சியா) துணை தலைவர் சுருளிவேல், ‘டாக்ட்’ மாவட்ட தலைவர் ஜேம்ஸ் ஆகியோர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி திட்டத்தில் வரி விதிப்பில் தொடங்கி கணக்குகள் தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கை களில் தொழில்துறையினர் குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர பிரிவை சேர்ந்த தொழில் துறையினருக்கு பல பிரச்சினைகள் உள்ளன. இவை குறித்து மத்திய, மாநில ஜிஎஸ்டி அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் சமீப காலமாக புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
மாநில(தமிழ்நாடு அரசு) ஜிஎஸ்டி அலுவலகம் சார்பில் அவுட்சோர்ஸிங் முறையில் ஆந்திராவை சேர்ந்த நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு ள்ளது. இதன்பேரில் அந்நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் உள்ள எம்எஸ்எம்இ தொழில் நிறுவனத்தினருக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதில் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்டவை தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர்.
தொழில் நிறுவனத்தினர் மாதந்தோறும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அடுத்த மாதங்களில் 10-ம் தேதிக்குள் கணக்கு களை தாக்கல் செய்தும், 20-ம் தேதிக்குள் வரி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் 20-ம் தேதிக்கு பின் வரி செலுத்த காலதாமதம் செய்தால் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.50 வீதம் அபராதம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது. தொழில் துறையினர் வழங்கும் பொருட்களுக்கு உரிய நேரத்தில் பணம் பட்டுவாடா செய்ய அரசு உத்தரவிட்ட போதும் நடைமுறையில் மிகுந்த நிதி நெருக்கடியை எதிர்கொண்டுதான் தொழில் துறையினர் வரி செலுத்தி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் கடந்த 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் தொடங்கி 2022-ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களை கண்டறிந்து தொழில் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்வது ஏற்புடையதல்ல. தவிர மாநில ஜிஎஸ்டி நிறுவனத்தின் அனுமதி பெற்ற ஆந்திர நிறுவனம் தமிழகத்திலுள்ள தொழில்துறையினருக்கு தினமும் நோட்டீஸ் வழங்கி வருகிறது.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள்(உற்பத்தி, சேவை இரண்டும் சேர்த்து) உள்ள நிலையில் தற்போது வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை எம்எஸ்எம்இ துறையை முற்றிலும் அழிக்கும் செயலாகும்.
எனவே இது குறித்து பல்வேறு தொழில்துறையினர் ஒன்றிணைந்த ‘போசியா’ தொழில் அமைப்பு சார்பில் மாநில ஜிஎஸ்டி அதிகாரிகளை விரைவில் நேரில் சந்தித்து இந்நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரிக்கை விடுக்க முடிவு செய்துள்ளோம். தொடரும் பட்சத்தில் போராட்டம் நடத்துவது போன்ற நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து அறிவிப்பு வெளியிட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT