Published : 14 Aug 2025 01:40 AM
Last Updated : 14 Aug 2025 01:40 AM
சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாளை முதல் சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என அடுத்தடுத்து 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வசிப்போர், சொந்த ஊர்களுக்கு பயணிக்கத் திட்டமிட்டுள்ளனர். ரயிலில் முன்பதிவு மற்றும் தட்கலில் பயணச்சீட்டு கிடைக்காத நிலையில், பொதுமக்கள் அரசுப் பேருந்துகளை நாடுகின்றனர். குறிப்பாக, சென்னையில் இருந்து தொலைதூர ஊர்களுக்குச் செல்லும் பயணிகள், படுக்கை வசதி கொண்ட பேருந்துகளையே பெரிதும் விரும்புகின்றனர்.
ஆனால், படுக்கை வசதி கொண்ட அரசுப் பேருந்துகளில் முன்பதிவு நிறைவடைந்து விட்டால், வேறு வழியின்றி ஆம்னி பேருந்துகளை பயணிகள் அணுகுகின்றனர். ஆம்னி பேருந்துகளின் கட்டணம், தொடர் விடுமுறை காலங்களில் வரைமுறையின்றி பன்மடங்கு உயர்த்தப்படுகிறது.
குறிப்பாக, சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல இருக்கையில் அமர்ந்து பயணிக்க குறைந்த பட்சமாக ரூ.1,845, அதிகபட்சமாக ரூ.4,218 வசூலிக்கப்படுகிறது.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்த கட்டணத்தைக் காட்டிலும் இருமடங்கு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் பயணிகள் ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டியுள்ளது. எனவே, விடுமுறைக் காலங்களில் படுக்கை வசதி கொண்ட அரசு விரைவுப் பேருந்துகளை அதிக அளவில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறும்போது, “விழா நாட்களில்தான் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். சாதாரண நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட குறைவாகவே வசூலிக்கிறோம். இதனால் ஏற்படும் இழப்பை விழா நாட்களில் தான் ஈடுசெய்ய முடியும். அதே நேரம், சங்க உறுப்பினர்கள் நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூலிப்பதில்லை. அவ்வாறு வசூலிப்பதை அறிந்தால் நாங்களே போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் அளித்து விடுகிறோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT