Published : 13 Aug 2025 07:43 AM
Last Updated : 13 Aug 2025 07:43 AM
புதுடெல்லி: இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதிப்பை அறிவித்துள்ள நிலையில், அது இந்திய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய சந்தைகளை தேடுமாறு ஏற்றுமதியாளர்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது
இதுகுறித்து மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்ஜன் சிங், கடல் உணவு ஏற்றுமதியாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது கூறியதாவது: தற்போதைய சூழலை ஏற்றுமதியாளர்கள் தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். இந்திய இறால் மற்றும் பிற மீன் வகைகளுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், ஏராளமான மாற்று சந்தை வாய்ப்புகள் உள்ளன.
இதனை கருத்தில் கொண்டு புதிய சந்தைகளை கைப்பற்றுவதில் ஏற்றுமதியாளர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும். இவ்வாறு ராஜீவ் கூறினார். அமெரிக்காவுக்கான பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதியில் இந்தியா தற்போது முன்னிலையில் உள்ளது. இதன் சந்தைப் பங்கு 2015-ல் 24.4%-ஆக இருந்த நிலையில் 2024 -ல் 40.6% -ஆக கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், அமெரிக்காவின் அதிக வரி விதிப்பின் காரணமாக இந்தியாவின் சந்தைப் பங்கு கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் மாற்று சந்தைகளை தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவின் சந்தை வரம்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு உத்தியை வகுக்க ஏற்றுமதியாளர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
மாற்று சந்தைகளாக இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், தென் கொரியா, ரஷ்யா, சீனா ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்காக, மதிப்புக் கூட்டல், பதப்படுத்துதல், பேக்கேஜிங் வசதிகளை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் மீன்வள உட்கட்டமைப்பு நிதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஏற்றுமதியாளர்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவின் வருடாந்திர மீன் உற்பத்தி 104% என்ற உயர் வளர்ச்சியை எட்டியுள்ளது. 2013-14-ல் 96 லட்சம் டன்னாக இருந்த மீன் உற்பத்தி 2024-25-ல் 195 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் ரூ.60,524 கோடி மதிப்புள்ள 17.81 லட்சம் மெட்ரிக்டன் கடல் உணவுகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT