Published : 13 Aug 2025 07:29 AM
Last Updated : 13 Aug 2025 07:29 AM
புதுடெல்லி: இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து தரைவழியாக சணல் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் இருந்து கயிறு, சணல் பொருட்களை தரை மார்க்கமாக இறக்குமதி செய்வதற்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது.
இதில், சணல் சாக்குகள், சணல் கயிறு, பைபரால் நெய்த துணிகள் உள்ளிட்டவையும் இந்த தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதேநேரம், மகாராஷ்டிராவில் உள்ள நவ ஷேவா துறைமுகம் வழியாக இந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் வங்கதேசத்திலிருந்து ஆயத்த ஆடைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு துறைமுக கட்டுப்பாடுகளை இந்தியா விதித்தது.
வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, குறிப்பாக இந்துக்கள் மீதான தாக்குதல்களைக் கட்டுப்படுத்தத் தவறியதைத் தொடர்ந்து இந்தியா-வங்கதேச உறவு மோசமடைந்துள்ளது.
ஜவுளித் துறையில் வங்கதேசம் இந்தியாவுக்கு மிகப்பெரிய போட்டியாளராக உள்ளது. 2023-24 -ம் ஆண்டில் இந்தியா-வங்கதேச வர்த்தகம் 12.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2024-25 -ம் ஆண்டில், இந்தியாவின் ஏற்றுமதி 11.46 பில்லியன் டாலர்களாகவும், இறக்குமதி 2 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT