Published : 12 Aug 2025 05:34 AM
Last Updated : 12 Aug 2025 05:34 AM
சென்னை: தமிழ்நாடு முழுவதும் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் நவம்பர் மாதத்துக்குள் விரிவாக்கம் செய்யப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதால், வனவிலங்குகள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கில், இயற்கை சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பை போக்க, காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நடை முறைபடுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் கடந்த 2023-ம் ஆண்டு நீலகிரியில் உள்ள கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்தியது. மேலும் இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த திட்டத்தின்படி விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்கள் மீது ரூ.10 கூடுதலாக விற்க வேண்டும். இதையடுத்து வாடிக்கையாளர்கள் காலி பாட்டில்களை திரும்பத் தரும்பட்சத்தில் ரூ.10 அவர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும்.
தற்போது பெரம்பலூர், அரியலூர், நீலகிரி, கோவை, நாகை, திருவாரூர், தர்மபுரி, தேனி மற்றும் குமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இத்திட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் வரும் நவம்பர் மாதத்துக்குள் தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: இந்த திட்டத்தில் தற்போது 95 சதவீதம் வரை காலி பாட்டில்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்ப பெறப்படுகிறது. இதுவரை வாடிக்கையாளர்களிடம் ரூ.450 கோடி வசூலிக்கப்பட்டு அதில் ரூ.350 கோடி மீண்டும் அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை தனி கணக்கில் சேமித்து வைக்கப்படுகிறது. இதை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்தவகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்கள் விரிவாக்கம் செய்வதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தப்புள்ளிகள் இந்த வாரத்துக்குள் இறுதி செய்யப்படும். நவம்பர் மாதத்துக்குள் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு கூறினர்.
இருப்பினும் இந்த திட்டத்தை செயல்படுத்த நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக பணியாளர்கள் கூறுகின்றனர். ஒரு சில கடைகளில் இடம் இல்லை என்றும் அதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் காலி மது பாட்டில்களை பெறும் பணியாளருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததல், தோல் பாதிப்பு ஏற்படுவதாகவும் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT