Last Updated : 08 Aug, 2025 09:37 PM

 

Published : 08 Aug 2025 09:37 PM
Last Updated : 08 Aug 2025 09:37 PM

மரக்காணம் - புதுச்சேரி இடையே ரூ.2,157 கோடியில் நான்கு வழிச்சாலை - மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: தமிழகத்தின் மரக்காணம் – புதுச்சேரி இடையே 46 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.2,157 கோடி செலவில் நான்கு வழிச் சாலை அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், நாகப்பட்டினம் இடையே இரண்டு வழி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையாக மாநில நெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய நரகங்கள் மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் போக்குவரத்துக்கான சாலைக் கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு மரக்காணம் – புதுச்சேரி இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 332 ஏ நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட உள்ளது. அதன்படி, தமிழகத்தின் மரக்காணம் – புதுச்சேரி இடையே 46 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.2,157 கோடி செலவில் நான்கு வழிச் சாலை அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டம் இரண்டு மிகப் பெரிய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் இரண்டு மாநில நெடுஞ்சாலைகளுடன் ஒருங்கிணைத்து மேம்படுத்தப்பட உள்ளதால், தமிழகம் முழுவதும் பொருளாதார சமூக மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான தடையற்ற இணைப்பை வழங்குகிறது.

மேலும், புதுச்சேரி மற்றும் சின்னபாபு சமுத்திரத்தில் இரண்டு ரயில் நிலையங்கள் மற்றும் சென்னை – புதுச்சேரியில் இரண்டு விமான நிலையங்கள் கடலூரில் ஒரு சிறிய துறைமுகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பல்வகைப் போக்குவரத்து வழித்தடமாக இந்த நெடுஞ்சாலை மேம்படுத்தப்பட உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x