Published : 07 Aug 2025 07:54 PM
Last Updated : 07 Aug 2025 07:54 PM
கப்பல்களை நிறுத்திவைக்கவும், சரக்குப் பொருள்களை ஏற்றி இறக்கவும் சேவைகளையும் வசதிகளையும் வழங்கும் சிங்கப்பூர் துறைமுகம், சிங்கப்பூரின் பொருளாதாரத்துக்கும் வளர்ச்சிக்கும் முக்கியமான பங்களிப்பைச் செய்துவருகிறது. ஒரு சிறிய நகரமாக இருந்த காலத்தில் ஆற்றங்கரையில் ஒரு துறைமுகத்துடன் சிங்கப்பூர் இயங்கிக் கொண்டிருந்தது.
இன்றைக்கு உலகில் உள்ள பல்வேறு துறைமுகங்களுடனான இணைப்பைக் கொண்டிருக்கும் அளவுக்கு அது மிகப் பிரம்மாண்டமானதாக விரிவடைந்திருக்கிறது. இன்றைக்கு அதிகமான சரக்குப் பெட்டகங்களைக் கையாளுகின்ற, தொடர்ச்சியான, முழுமையான பயன்பாட்டில் உள்ள உலகின் இரண்டாவது துறைமுகமாக சிங்கப்பூர் துறைமுகம் வளர்ந்திருக்கிறது.
சுதந்திரத்துக்குப் பிறகு... - 1960களிலும், 1970களிலும் சிங்கப்பூர் வேகமாகத் தொழில்மயமாகிக்கொண்டிருந்த காலகட்டத்தில், அதன் துறைமுகமும் துரிதகதியில் வளர்ச்சியடைந்தது. 1965இல் தொடங்கப்பட்ட ஜூரோங் துறைமுகம், தொழில்மயமாகிக்கொண்டிருந்த ஜூரோங் நகர வளர்ச்சித் திட்டத்தின் அடிப்படை அம்சமாக விளங்கியது.
ஜூரோங் தொழில்துறை எஸ்டேட்டில் இயங்கிவரும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான சரக்குகளைக் கையாள்வதற்காக இந்தத் துறைமுகம் தொடங்கப்பட்டது. 1971இல், பிரிட்டனின் கடற்படைத் தளத்தை வாங்கிய சிங்கப்பூர் துறைமுக ஆணையம் (PSA) அதை செம்பவாங் படகுத்துறையாக மாற்றியது. 1974இல், பாசிர் பாஞ்சாங் படகுத் துறை செயல்படத் தொடங்கியது.
1960களின் இறுதியில், பல மில்லியன் டாலர் முதலீட்டில், தென்கிழக்கு ஆசியாவின் முதல் சரக்குப்பெட்டக முனையத்தை சிங்கப்பூர் துறைமுக ஆணையம் உருவாக்கியது. அந்தக் காலகட்டத்தில் சரக்குப் பெட்டகப்பரிவர்த்தனையின் நிலவரம் என்ன என்பது தெளிவில்லாமல் இருந்தது. ஏனெனில், ஐரோப்பாவுக்கும் தென்கிழக்கு ஆசியாவுக்கும் இடையில் சென்றுவரும் சரக்குக் கப்பல்களை உருவாக்க எந்தக் கப்பல் நிறுவனமும் முன்வரவில்லை.
1972ஆம் ஆண்டு மூன்று சரக்குப்பெட்டக நிறுத்துமிடங்களுடன், தஞ்சோங் பாகர் சரக்குப்பெட்டக முனையம் திறக்கப்பட்டது. முதன்முதலாக, எம்.வி. நிஹான் என்னும் சரக்குக் கப்பல் 24 ஜூன் 1972 அன்று இந்த முனையத்துக்கு வந்தது. சரக்குக் கப்பல் போக்குவரத்து வளர்ச்சி ஆரம்பத்தில் மெதுவாகவே இருந்தது. ஆனால் 1980களில், சரக்குப் பெட்டகங்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்தது.
இதனால், தேவையைச் சமாளிக்க அதிகமான சரக்குக் கப்பல் நிறுத்துமிடங்களை உருவாக்க வேண்டியிருந்தது. துறைமுகங்களுக்கு வரும் சரக்குக் கப்பல்கள் அதிகரித்த நிலையில், அது தொடர்புடைய வணிகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கணினிமயமாக்கல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
1990களில், துறைமுகத்தின் பல்வேறு வசதிகள் விரிவுபடுத்தப்பட்டன. துறைமுகத்தின் திறன்களை மேம்படுத்தும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டன. புதிய பிரானி முனையத்தில் கப்பல் நிறுத்துமிடங்களை அதிகரிப்பது, தஞ்சங் பாகர் சரக்குப் பெட்டக முனையத்தின் வளர்ச்சிப் பணிகள், அதிகரித்துவந்த மொத்த சரக்குகளைக் கையாள ஜூரோங் துறைமுகத்தின் திறனை அதிகரித்தல் போன்றவை இதில் அடங்கும். 1996ஆம் ஆண்டில், சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் துறைமுக ஒழுங்குமுறைச் செயல்பாடுகள் சிங்கப்பூர் கடல்சார் - துறைமுக ஆணையத்தால் கையகப்படுத்தப்பட்டன.
1997இல் நிறுவனமயமாக்கப்பட்ட சிங்கப்பூர் துறைமுக ஆணையம், அதன் பின்னர் சிங்கப்பூர் துறைமுக ஆணைய கார்ப்பரேஷன் லிமிடெட் என்று அழைக்கப்படுகிறது. ஜூரோங் துறைமுகத்தைத் தவிர, மற்றவற்றை இன்றும் இந்நிறுவனம் நிர்வகித்து, இயக்குகிறது.பல நாடுகளில் உள்ள பல்வேறு துறைமுகங்களுடன் சிங்கப்பூர் துறைமுகம் இணைக்கப்பட்டுள்ளது. ஏராளமான கப்பல்கள் இத்துறைமுகத்துக்கு வந்துசெல்கின்றன. கப்பல் துறையில், மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நவீனத் தொழில்நுட்பங்கள் கொண்ட இரண்டு புதிய பாசிர் பாஞ்சாங் சரக்குப்பெட்டக முனையங்கள் 2000ஆம் ஆண்டில் திறக்கப்பட்டன.
ஆளில்லாப் பளுத்தூக்கிகள், தானியங்கிச் சரக்குப் பெட்டகக் கட்டுமான இடம் போன்றவற்றில் சிங்கப்பூர் துறைமுக ஆணையம் பெருமளவில் முதலீடு செய்தது. அதே ஆண்டில், துவாஸ் பகுதியில் உள்ள அனைத்து சரக்குப்பெட்டக முனையங்களையும் ஒற்றைப் பெரிய துறைமுகமாக இணைப்பது என்ற அதிகாரபூர்வமாக முடிவெடுக்கப்பட்டது. படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டுவரும் இத்திட்டம், சிங்கப்பூர் துறைமுகத்தின் வளர்ச்சியில் ஒரு புதிய பரிணாமமாகக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT