Published : 05 Aug 2025 08:59 PM
Last Updated : 05 Aug 2025 08:59 PM
கோவை: தமிழக அரசு சார்பில் கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தொழிலாளர் தங்கும் விடுதிக்கு தொழில் நிறுவனத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அறைகளுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறிச்சி பகுதியில் அமைந்துள்ளது ‘சிட்கோ’ தொழிற்பேட்டை வளாகம். தமிழக அரசு சார்பில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் பயன்பெற உதவும் வகையில் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதி திட்டத்திற்கு கடந்த 2022-ம் ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சமீபத்தில் இந்த விடுதி திறக்கப்பட்டது.
மொத்தம் ரூ.23.05 கோடி செலவில் 1.49 ஏக்கர் நிலத்தில் இந்த விடுதி கட்டப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் 66 அறைகள், ‘பி’ பிரிவில் 45 அறைகள் என மொத்தம் 111 அறைகள் உள்ளன. 528 தொழிலாளர்கள் தங்க உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதியில், தொழிலாளர்கள் குடும்பத் துடன் தங்கும் அறைகளும் உள்ளன. 4 பேர் தங்குவதற்கு ரூ.8,000, 6 பேர் தங்கும் அறைக்கு ரூ.12,000 மாத வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் மட்டும் தங்கும் வகையிலான அறைகளில் எட்டு பேர் தங்க ரூ.12,000 வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு மின்தூக்கிகள், விளையாட்டுத் திடல், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், மழைநீர் சேகரிப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கட்டுமான பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட்ட நிலையில் அறைகளை முன்பதிவு செய்யும் பணிகளை தொழில்துறையினர் தொடங்கியு ள்ளனர்.
இதுகுறித்து ‘சிட்கோ’ மேலாளர் சண்முக வடிவேல் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியது: புதிதாக கட்டப்பட்டுள்ள தொழிலாளர் தங்கும் விடுதிக்கு தொழில் நிறுவனத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலர் தினமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன் பதிவு தொடங்கி சில நாட்களில் 13 அறைகள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு நிறுவனத்தினர் அறைகளை விரைவில் பயன்படுத்திக் கொள்ள உத்தரவாதம் அளித்து சென்றுள்ளனர்.
தற்போது நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் சுற்றுப்புற பகுதிகளில் வாடகை குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு ஏற்கெனவே செலுத்தப்பட்ட வைப்பு தொகை பெறுதல், முறைப்படி அறிவிப்பு கொடுத்த அறை மற்றும் குடியிருப்புகளை காலி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாக தொழில் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதி தொழிலாளர்களுக்கு மிகவும் பயன் தரும் வகையில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு ள்ளது என்று அவர் தெரிவித்தார். கோவை ‘சிட்கோ’ தொழிற்பேட்டை நிறுவன உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் (கொசிமா) முன்னாள் தலைவர் சுருளிவேல் கூறும்போது, “இந்த விடுதி தொழிலாளர்களுக்கு மிகவும் பயன் தரும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT