Published : 05 Aug 2025 08:54 AM
Last Updated : 05 Aug 2025 08:54 AM
பெரும் பயணங்கள் சிறிய அடிவைப்புகளில் தான் தொடங்குகின்றன. இது ஒரு சீனப் பழமொழி. இந்த அடிவைப்பு நிலத்தில் மட்டுமல்ல நீரிலும் அமையலாம். டிரான்ஸ்வேர்ல்ட் (Transworld) நிறுவனத்தின் தொடக்கம் அப்படித்தான் அமைந்தது. 1999ஆம் ஆண்டு கடல்வழி சரக்குப் போக்கு வரத்திற்காக, சிங்கப்பூரின் ஆன்சன் வீதியில் நான்கு ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட நிறுவனம், இன்று 11 நாடுகளில் பரந்திருக்கிறது. ஊழியர்கள்: 2000 பேர். மதிப்பு 400 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.3,500 கோடி).
மகேஷ் சிவசாமிக்கு இந்த நிறுவனத்தைத் தொடங்கியபோதே இதன் வளர்ச்சியைக் குறித்த தொலை நோக்கு இருந்திருக்கும். அவரது தந்தை ஆர்.சிவசாமி எழுபதுகளில் கடல்வழி சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தை மும்பையில் தொடங்கினார். 1977இல் அதன் தலைமையகத்தை துபாய்க்கு மாற்றினார். வணிகம் வளர்ந்தது. 1989இல் அவர் எதிர்பாராத விதமாக இறந்து போனார். தனயன் ராமகிருஷ்ணன் சிவசாமி பொறுப்பேற்றார். வணிகம் மேலும் வளர்ந்தது.
பத்தாண்டுகளுக்குப் பிறகு தம்பி மகேஷ் சிவசாமிக்குச் சிறகு முளைத்தது. அவர் மத்திய கிழக்கிலிருந்து புலம்பெயர விரும்பினார். அவர் வலசை போக உகந்ததாக அவரது நலம் விரும்பிகள் மேற்குத் திசையைக் கை காட்டினார்கள். ஆனால், அவரின் தேர்வு கிழக்காக இருந்தது. மகேஷ் கூடடைந்தது சிங்கப்பூர். தொண்ணூறுகளில் சிங்கப்பூர், ஆசியாவின் தலையாய கடல்சார் மையங்களுள் ஒன்றாக உருவாகியிருந்தது.
தொடங்கிய சில மாதங்களில் நிறுவனத்திற்கு மெயர்செக் லைன் என்கிற டேனிஷ் நிறுவனத்தின் ஆணை கிடைத்தது. மெயர்செக்கின் சரக்குகளை சிங்கப்பூரிலிருந்து வங்கத்தின் துறைமுகங்களுக்கு அனுப்பிவந்தது டிரான்ஸ்வோர்ல்ட். ஆரம்ப ஆண்டுகளில் இந்த ஒரு நிறுவனத்தின் சரக்குகளை மட்டுமே கையாண்டு வந்தது. 2005இல் உலக வணிகம் பெரிதும் வளர்ந்தது. டிரான்ஸ்வேர்ல்ட் ஏற்றி இறக்கிய கொள்கலன்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது. 2007இல் நிறுவனம் சொந்தமாகக் கப்பல்களை வாங்கத் தொடங்கியது. இப்போது நிறுவனத்திற்கு 13 கப்பல்களும் 30,000 கொள்கலன்களும் உள்ளன.
இப்போது டிரான்ஸ்வோர்ல்ட் என்கிற குடையின் கீழ், கப்பல்கள், கிடங்குகள், கொள்கலன்கள், துறைமுக நிர்வாகம், கடல்சார் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை என்று பல நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த நிறுவனங்கள் ஆசிய, கிழக்கு ஆப்பிரிக்க கரைகளுக்குள் மட்டுமே இயங்குகின்றன. அது நிர்வாகத்தில் கூடுதல் முனைப்பை நல்குகிறது.
மகேஷ் ஏன் சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்தார்? பல காரணங்கள் இருக்கலாம். சில முக்கியமானவை. சிங்கப்பூர் பல கடல்வழிப் பாதைகளின் சந்தியில் அமைந்திருக்கிறது; துறைமுகம் அதிநவீனமானது. அது பல பன்னாட்டுக் கப்பல்களுடன் பரபரப்பாக இயங்குகிறது. அரசு வணிகத்தை ஊக்குவிக்கிறது; அதன் கொள்கை வெளிப்படைத்தன்மை மிக்கது. இந்தச் சூழல் தொழில் செய்ய ஏதுவானது (ease of doing business). சிங்கப்பூர் ஆய்வுக்கும் பயிற்சிக்கும் உகந்த களமாக விளங்குகிறது.
இப்படியான நிறுவனங்கள் ஏன் இந்தியாவில் குறைவாக இருக்கின்றன? எனது கடல்சார் பொறியாள நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள்: இந்தியாவின் துறைமுகங்கள் பல நவீனமாகியிருக்கின்றன. எனில், நாட்டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு என்பது சாலைகளையும் பாலங்களையும் மின்சாரத்தையும் மழைநீர் வடிகால்களையும் உள்ளடக்கியது. இவை மேம்பட வேண்டும். மேலும், நமது அதிகார வர்க்கம் சிவப்பு நாடாக்களின் மேல் மிகுந்த பிரேமையுடையது. அவர்தம் கைகளும் நீளமானது.
சிங்கப்பூர் உலக அளவில் கடல்சார் வணிகத்தில் சிறந்து விளங்குகிறது. அதில் டிரான்ஸ்வேர்ல்டிற்கும் பங்கிருக்கிறது. அது நமக்குப் பல பாடங்களை வழங்குகிறது. நாம் அவற்றை நீர் மேல் அல்ல, நிலத்தின் மீது எழுதி வைப்போம். பயன்கொள்வோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT