Published : 04 Aug 2025 07:11 AM
Last Updated : 04 Aug 2025 07:11 AM
புதுடெல்லி: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவீத வரி விதித்துள்ளது. இது வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஓராண்டில் அமெரிக்காவுக்கு 8 ஆயிரத்து 650 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகின்றன. இவற்றில், அமெரிக்காவின் வரிவிலக்கு சட்ட விதிப்படி, பாதிப்பொருட்களுக்கு அமெரிக்கா வரிவிலக்கு அளிக்கிறது.
மருந்து பொருட்கள், எரிசக்தி பொருட்கள், முக்கியமான கனிமங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றுக்கு 25 சதவீத வரிவிலக்கு பொருந்தாது. எனவே, 4 ஆயிரத்து 800 கோடி டாலர், அதாவது மொத்த ஏற்றுமதியில், ஏறத்தாழ பாதி மதிப்புள்ள இந்திய ஏற்றுமதிக்கு மட்டுமே பாதிப்பு இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த 25 சதவீத புதிய வரிவிதிப்பு இந்தியாவில் மிகக்குறைந்த அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி இழப்பு 0.2 சதவீதத்தைத் தாண்ட வாய்ப்பில்லை என்று இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஒருவர் புளூம்பெர்க் பொருளாதார ஆய்வு அமைப்பிடம் தெரிவித்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ற விவசாயம், பால் பொருள் சந்தைகளைத் திறக்க வேண்டும் உள்ளிட்ட அமெரிக்க அரசின் அழுத்தத்துக்கு இந்திய அரசு அடிபணியாது என்றும், மாட்டிறைச்சி அல்லது ‘அசைவப் பால்' இறக்குமதியை அனுமதிக்காது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ‘தேசிய நலனைப் பாதுகாக்க' இந்திய அரசு திறன்பட செயல்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த நிதியாண்டில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 11.6 சதவீதம் அதிகரித்து 86.51 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT