Published : 02 Aug 2025 07:41 AM
Last Updated : 02 Aug 2025 07:41 AM

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் தாமதமாவது ஏன்? - விவசாயிகளை பாதிக்கும் அம்சங்களை ஏற்க இந்தியா மறுப்பு

புதுடெல்லி: அசைவ பால் மற்​றும் மரபணு மாற்ற தானிய விவ​காரங்​களால் இந்​தி​யா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாவ​தில் தாமதம் ஏற்​பட்டு வரு​கிறது. உலகம் முழு​வதும் சுமார் 100-க்​கும் மேற்​பட்ட நாடு​களுக்​கான வரி விகிதங்​களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஏப்​ரலில் வெளி​யிட்​டார். இதன்​காரண​மாக உலகம் முழு​வதும் பொருளா​தார மந்தநிலை ஏற்​பட்​டது. அமெரிக்கா உட்பட பல்​வேறு நாடு​களின் பங்கு சந்​தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்​பட்​டது.

இதைத் தொடர்ந்து வரி விகிதத்தை குறைப்​பது தொடர்​பாக பல்​வேறு நாடு​கள் அமெரிக்கா​வுடன் பேச்​சு​வார்த்​தையை தொடங்கின. இந்​திய தரப்​பில் மூத்த பொருளா​தார ஆலோ​சகர் ராஜேஷ் அகர்​வாலும் அமெரிக்க தரப்​பில் பிரென்​ட​னும் கடந்த 5 மாதங்​களாக பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர்.

இந்த பேச்​சு​வார்த்​தை​யில் குறிப்​பிடத்​தக்க முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருக்​கிறது. ஆனால் வேளாண் துறை சார்ந்த விவ​காரங்​களில் அமெரிக்​கா​வின் கோரிக்​கைகளை ஏற்க இந்​தியா திட்​ட​வட்​ட​மாக மறுத்து வரு​கிறது. இதன்​காரண​மாக இரு நாடு​கள் இடையே வர்த்​தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாவ​தில் தொடர்ந்து கால​தாமதம் ஏற்​பட்டு வரு​கிறது.

இந்த சூழலில் வரும் 7-ம் தேதி முதல் இந்​திய பொருட்​களுக்கு 25 சதவீத வரி விதிக்​கப்​படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். மேலும் ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்​தால் இந்​தி​யா​வுக்கு அபராதம் விதிக்​கப்​படும் என்​றும் அவர் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

இதுகுறித்து மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில் துறை அமைச்​சர் பியூஷ் கோயல் மக்​களவை​யில் நேற்று முன்​தினம் கூறும்​போது, “நாட்​டின் பொருளா​தார நலன்​களை பாது​காக்க தேவை​யான நடவடிக்​கைகளை மத்​திய அரசு மேற்​கொண்டு வரு​கிறது. அதே​நேரம் வரி விதிப்பு தொடர்​பாக அமெரிக்கா​வுடன் தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்டு வரு​கிறது’’ என்று விளக்​கம் அளித்​தார்.

இந்​தி​யா​வின் வியூ​கம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் கண், காது, மூளை என்று வர்​ணிக்​கப்​படும் அரசி​யல் வியூக நிபுணர் ஜேசன் மில்​லர் கடந்த மே மாதம் இந்​தி​யா​வின் சிறப்பு தூத​ராக நியமிக்​கப்​பட்​டார். ஓராண்டு ஒப்​பந்த அடிப்​படை​யில் இந்​தி​யா​வுக்​காக அவர் பணி​யாற்றி வரு​கிறார்.

மேலும் அமெரிக்க அரசின் மிக முக்​கிய பதவி​களில் இந்​திய வம்​சாவளி​யினர் உள்​ளனர். அந்த நாட்​டின் முன்​னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதி​காரி​களாக இந்​திய வம்​சாவளி​யினர் பதவி வகிக்​கின்​றனர். அமெரிக்க அரசி​யலில், யூதர்களுக்கு இணை​யாக இந்​தி​யர்​களும் ஆதிக்​கம் செலுத்தி வரு​கின்​றனர். இது இந்​தி​யா​வின் அசைக்க முடி​யாத பலமாக கருதப்​படு​கிறது.

இந்த 'லாபி​யின்' காரண​மாக இந்​திய பொருட்​கள் மீதான அமெரிக்க அரசின் 25 சதவீத வரி விதிப்பு அடுத்​தடுத்து தள்ளி வைக்​கப்​படும் என்று தெரி​கிறது. வரி விகிதம் தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடத்த வரும் 25-ம் தேதி அமெரிக்​கா​வின் உயர்​நிலைக் குழு டெல்லி வரு​கிறது.

அப்​போது இருதரப்​பிலும் கருத்து வேறு​பாடு​கள் முழு​மை​யாக களை​யப்​படும். இதன்​பிறகு இந்​திய உயர்​நிலைக் குழு வாஷிங்​டன் செல்​லும். வரும் அக்​டோபர் அல்​லது நவம்​பரில் அமெரிக்கா​வுடன் முதல்​கட்ட வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று நம்​பப்​படு​கிறது.

இதுகுறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: தற்​போது அமெரிக்க உணவு தானி​யங்​களுக்கு சுமார் 40 சதவீத இறக்​குமதி வரியை இந்​தியா விதிக்​கிறது. இந்த வரியை 10 சதவீத​மாக குறைக்க வேண்​டும் என்று அமெரிக்கா வலி​யுறுத்​துகிறது. இதை இந்தியா ஏற்க மறுத்​து​விட்​டது. அமெரிக்​கா​வின் மரபணு மாற்​றம் செய்​யப்​பட்ட உணவு தானி​யங்​களை இறக்​குமதி செய்​ய​வும் மத்​திய அரசு மறுத்​து​விட்​டது.

பன்​றி, மீன், நாய், குதிரை ஆகிய​வற்​றின் கொழுப்​பு, ரத்​தத்​தில் இருந்து தயாரிக்​கப்​படும் புரோட்​டீன், அமெரிக்க பசுக்​களுக்கு உணவாக வழங்​கப்​படு​கிறது. இந்த உணவை சாப்​பிடும் பசுக்​களில் இருந்து கிடைக்​கும் பால், அசைவ பால் என்று கூறப்படுகிறது.

சில அமெரிக்க பால் உற்​பத்தி நிறு​வனங்​கள், விலங்​கு​களின் எலும்​பு​களில் இருந்து பெறப்​படும் நொதி​களை பாலில் கலக்கின்றன. எனவே அமெரிக்க நிறு​வனங்​களின் அசைவ பாலை இந்​தி​யா​வில் விற்​பனை செய்ய மத்​திய அரசு திட்​ட​வட்​ட​மாக மறுத்து உள்​ளது.

இந்​தி​யா​வின் வேளாண்மை மற்​றும் பால் வளத் துறை​யில் அமெரிக்க நிறு​வனங்​கள் கால் பதித்​தால் கோடிக்​கணக்​கான இந்​திய விவ​சா​யிகள் பாதிக்​கப்​படு​வார்​கள். எனவே வேளாண்மை சார்ந்த விவ​காரங்​களில் அமெரிக்​கா​வின் கோரிக்​கைகளை இந்​தியா ஒரு​போதும் ஏற்​காது. இது, இருதரப்பு ஒப்​பந்​தம் கையெழுத்​தாவ​தில் மிகப்​பெரிய முட்​டுக்​கட்​டை​யாக இருந்து வரு​கிறது.

அமெரிக்​கா​வின் இயந்​திர தளவாடங்​கள், மின்​சார வாக​னங்​கள், மது​பானங்​கள், ஆப்​பிள் உள்​ளிட்ட பழங்​கள், கொட்டை வகைகள் மீதான இறக்​கும​தியை குறைக்க வேண்​டும் என்​றும் அந்த நாடு வலி​யுறுத்​துகிறது. இதுதொடர்​பாக விரி​வான பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

அமெரிக்க மின்​னணு சந்​தை​யில் இந்​திய தயாரிப்​பு​கள் கோலோச்சி வரு​கின்​றன. அதாவது அமெரிக்​கா​வில் விற்​பனை​யாகும் ஸ்மார்​ட் போன்​களில் 44 சதவீதம் இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்​டவை ஆகும். இதே​போல அமெரிக்​கா​வில் விற்​பனை​யாகும் ஆப்​பிள் போன்​களில் 78 சதவீதம் இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்​டவை ஆகும்.

இப்​போதைய நிலை​யில் இந்​தி​யா​வில் உற்​பத்தி செய்​யப்​படும் ஸ்மார்ட்​போன்​கள், கணினிகள் உள்​ளிட்ட மின்​னணு பொருட்​களுக்கு அமெரிக்க அரசு கூடு​தல் வரி வி​திக்​க​வில்​லை. தற்​போதைய 10 சதவீத வரியே தொடரும். 25 சதவீத வரி குறித்து பின்​னர் ஆலோ​சித்து முடிவு செய்​யப்​படும் என்​று அமெரிக்​கா அறி​வித்​திருக்​கிறது. இது இந்​தி​ய மின்​னணு நிறு​வனங்​களுக்​கு தற்​காலிக ஆறுதலாக அமைந்​துள்​ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய ஜவுளி, மருந்து துறைக்கு பாதிப்பு: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி வகைகளில் சுமார் 28 சதவீதம் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. இந்திய ஜவுளிகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டால் ஜவுளி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளில் சுமார் 40 சதவீதம் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் இந்தியாவில் இருந்து அரிசி, மளிகை பொருட்கள், வைரம், தங்க - வெள்ளி நகைகள், உருக்கு, அலுமினியம், தாமிரம் உள்ளிட்டவையும் அமெரிக்காவுக்கு கணிசமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அமெரிக்காவின் 25 சதவீத வரி விதிப்பு அமல் செய்யப்பட்டால் இவை சார்ந்த துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும். கடந்த 2014-ல் இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தகம் 191 பில்லியன் டாலராக இருந்தது. வரும் 2030-ம் ஆண்டில் இரு நாடுகள் இடையே 500 பில்லியன் டாலர் வர்த்தகத்தை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. எனவே இருதரப்புக்கும் பலன் அளிக்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x