Published : 28 Jul 2025 06:31 AM
Last Updated : 28 Jul 2025 06:31 AM
சென்னை: அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் 5 ஆண்டுகளுக்கு வெளிச்சந்தைகளில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தின் தினசரி மின்சாரத் தேவை சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருக்கும். கோடை காலங்களில் 20 ஆயிரம் மெகாவாட்டையும் கடந்து மின் தேவை அதிகரிக்கும். தமிழகத்தில் கடந்த ஆண்டு மே 2-ம் தேதி அதிகபட்ச மின் தேவை 20,830 மெகாவாட்டாக பதிவானது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 20 ஆயிரம் மெகாவாட்டை கடந்தது. மே மாதத்தில் மின் தேவை அதிகரிக்கும் என கப்பட்ட நிலையில் மழையின் காரணமாக மின் தேவை அதிகரிக்கவில்லை. மேலும் 2026 27-ம் ஆண்டில் தமிழகத்தின் மின் தேவை 23 ஆயிரம் வாட்டாக அதிகரிக்கும் கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழக மின் வாரியம் தனக்கு சொந்தமான அனல், எரிவாயு மின் நிலையங்கள், சூரியசக்தி மற்றும் காற்றாலைகள் மூலமாக மின் உற்பத்தி செய்து தேவையை சமாளிக்கும். இதை தவிர மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கிடைக்கும் தமிழகத்துக்கான பங்கில் இருந்தும் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இவை தவிர தேவை அதிகரிக்கும் போது மாநிலங்களுக்கு இடையே மின்சார பரிமாற்ற ஒப்பந்தம் மற்றும் வெளிச்சந்தைகளில் இருந்து நீண்ட, நடுத்தர, குறுகிய கால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் வாயிலாக மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் 5 ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் மற்றும் மாநிலத்துக்குள் உள்ள தனியார் உற்பத்தியாளர்களிடம் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரத்தை வாங்க உள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடுத்தர கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களின் கீழ் பிற மாநிலங்களில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து 800 மெகாவாட் மின்சார கொள்முதலுக்கு டெண்டர் வெளியிட மின் பகிர்மானக் கழகத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. டெண்டர் விரைவில் மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் டீப் போர்ட்டலில் வெளியிடப்படும். குறைந்த விலை வழங்கும் நிறுவனம் தேர்வு செய்யப்படும். மீதமுள்ள 700 மெகாவாட்டுக்கு, மாநிலத்துக்குள் உள்ள உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் 2,830 மெகாவாட்டுக்கான நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் 2028-ம் ஆண்டு முடிவடைகிறது. இந்த நேரத்தில் நடுத்தர கால ஒப்பந்தங்கள் அவசியமாகின்றன. 2028 வரை நீண்ட கால ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாது என்பதால், செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க நடுத்தர கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறுகிய கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் ஒரு யூனிட்டுக்கு ரூ.8 முதல் 10 வரை செலவு இருக்கும். ஆனால் நடுத்தர கால ஒப்பந்தங்கள் மூலம் குறைந்த விலை மின்சாரத்தை பெற முடியும். தற்போது மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள 4 நடுத்தர கால ஒப்பந்தங்களில், 2 ஏற்கெனவே காலாவதியாகிவிட்டன. அதே நேரத்தில் ஆலைகளுக்கு நிலக்கரி கிடைப்பதில் உள்ள பிரச்சினைகள் காரணமாக மற்ற 2 ஒப்பந்தங்களில் மின் விநியோகம் வழங்கப்படவில்லை.
2026-27-ம் ஆண்டில் மின்சார பற்றாக்குறை 3,845 மெகாவாட்டாகவும், 2029-30-ம் ஆண்டில் 6,822 மெகாவாட்டாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட மத்திய மின்சார ஆணையம் பரிந்துரைத்தது.
15,043 மெகாவாட் திறன் கொண்ட சொந்த அனல் மின் உற்பத்தி, மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் மின்சாரம் கிடைத்தாலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் கணிக்க முடியாத தன்மை காரணமாக மாலை நேர தேவையைப் பூர்த்தி செய்ய கூடுதல் மின்சாரம் தேவைப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT