Published : 21 Jul 2025 02:34 AM
Last Updated : 21 Jul 2025 02:34 AM
புதுடெல்லி: “அதிகரித்து வரும் சில்லரை டிஜிட்டல் பணம் செலுத்துதல்: இணக்கமாக செயல்படுத்துவதின் மதிப்பு” என்ற தலைப்பில் சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. இத்தளம் ஏராளமான வங்கி கணக்குகளை ஒரு செல்போன் செயலி மூலம் இணைக்க அனுமதிக்கிறது. இதன் மூலம் குறைந்த செலவில் எளிதாக, உடனடியாக, பாதுகாப்பான முறையில் பண பரிமாற்றம் நடைபெறுகிறது.
யுபிஐ மூலம் ஒவ்வொரு மாதமும் 1,800 கோடி பண பரிமாற்றம் நடைபெறுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் 32 சதவீதம் அதிகரிக்கிறது. யுபிஐ முறை இந்தியாவை ரொக்க பணம் மற்றும் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறையில் இருந்து மாற்றி டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு தள்ளியுள்ளது. தனிநபர்கள் மற்றும் சிறு தொழில்களில் நிதி உள்ளடக்கத்தில் முக்கிய அங்கமாக யுபிஐ மாறியுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் அனைத்து டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைகளில் 85 சதவீதம் யுபிஐ கணக்குகள் மூலம் நடைபெறுகிறது. இதில் 49 கோடியே 10 லட்சம் பேரும், 6 கோடியே 50 லட்சம் வணிகர்களும், 675 வங்கிகளும் ஒரே தளத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த யுபிஐ முறைக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலகம் முழுவதுமாக நடைபெறும் டிஜிட்டல் பணம் செலுத்துதலில் யுபிஐ 50 சதவீதம் உள்ளது.
இந்தியாவை தாண்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், பூட்டான், நேபாளம், இலங்கை, பிரான்ஸ் மற்றும் மொரிசீயஸ் ஆகிய நாடுகளில் யுபிஐ விரிவடைந்துள்ளது.
ஐரோப்பாவில், பிரான்ஸ் நாட்டில் முதல் முறையாக யுபிஐ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும் பணம் செலுத்தும் முறையை எளிதாக்கியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT