Published : 19 Jul 2025 07:00 AM
Last Updated : 19 Jul 2025 07:00 AM
ஹைதராபாத்: வீடு, மனை போன்ற சொத்துகளை விற்பனை செய்யும்போது கிடைக்கும் லாபம், மூலதன ஆதாயம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டை ரூ.30 லட்சத்துக்கு வாங்கிய ஒருவர், தற்போது ரூ.80 லட்சத்துக்கு விற்கிறார் என்றால் அவருக்கு ரூ.50 லட்சம் லாபம் கிடைக்கிறது. இந்த மூலதன ஆதாயத்துக்கு அவர் வரி செலுத்த வேண்டும்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 2002-ம் ஆண்டில் குறைந்த விலைக்கு ஒரு வீட்டை வாங்கினார். இந்த வீட்டை அவர் தற்போது ரூ.1.4 கோடிக்கு விற்பனை செய்தார். இந்த சொத்து விற்பனைக்கு அவர் மூலதன ஆதாய வரியை செலுத்த வேண்டும்.
ஆனால் வரியை செலுத்த விரும்பாத அவர், வருமான வரி கணக்கு தாக்கலில் பொய்யான தகவல்களை குறிப்பிட்டு, போலியான ஆவணங்களை சமர்ப்பித்தார். அதாவது வீட்டை மேம்படுத்த ரூ.68.7 லட்சம் செலவிட்டதாகவும் தனக்கு மூலதன ஆதாயமாக ரூ.24,774 மட்டுமே கிடைத்தது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். வீட்டின் மேம்பாட்டு பணிக்காக செலவிட்ட தொகைக்கான ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்தார்.
வருமான வரித் துறை அதிகாரிகள், இந்த ஆவணங்களை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது கடந்த 2002 ஜூலை 6-ம் தேதியிட்ட ஓர் ஆவணம் போலியானது என்பதை ஏஐ தொழில்நுட்பம் காட்டிக் கொடுத்தது. அந்த ஆவணத்தில் காலிப்ரி எழுத்துரு பயன்படுத்தப்பட்டு இருந்தது. கடந்த 2006-ம் ஆண்டில்தான் காலிப்ரி எழுத்துரு பயன்பாட்டுக்கு வந்தது.
அதற்கு முன்பு 2002-ம் ஆண்டில் காலிப்ரி எழுத்துருவில் ஆவணத்தை தயார் செய்திருக்க முடியாது என்று ஏஐ சுட்டிக் காட்டியது.
இதை ஆதாரமாக வைத்து ஹைதராபாத் நபரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரால் அசல் ஆவணத்தை சமர்ப்பிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து புதிதாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்த அவர், மூலதன ஆதாய வரியை செலுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT