Published : 19 Jul 2025 12:40 AM
Last Updated : 19 Jul 2025 12:40 AM
புதுடெல்லி: கடற்படை பயன்பாட்டுக்காக ஆழ்கடல் மீட்பு கப்பலை இந்துஸ்தான் ஷிப்யார்டு நிறுவனம் உருவாக்கியது. இந்தக் கப்பல் கடந்த 8-ம் தேதி கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் கப்பலை இந்திய கடற்படையில் இணைக்கும் விழா விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் சஞ்சய் சேத், கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரம்மாண்ட மீட்பு கப்பல் தயாரிக்கப்பட்டு சாதனை படைத்தது, தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு மிகவும் ஊக்குவிப்பானது என இருவரும் கூறினர்.
நிஸ்தர் கப்பல் 10,000 டன் எடையுடன் 118 மீட்டர் நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் உள்ள உபகரணங்கள் மூலம், வீரர்கள் 300 மீட்டர் ஆழம் வரை நீந்திச் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட முடியும். இதில் உள்ள ஆர்ஒவி நீர்மூழ்கிகள் மூலம் கடலில் 1,000 மீட்டர் ஆழத்திலும் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியும். இந்திய கடற்படையில் ஏற்கெனவே உள்ள ஆழ்கடல் நீர்மூழ்கி மீட்பு கப்பலுக்கு (டிஎஸ்ஆர்வி), இது தாய்க்கப்பலாக செயல்படும். நிஸ்தர் கப்பலில் உள்ள 75 சதவீத உபகரணங்கள் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரானவை.
உலகில் ஒரு சில நாடுகளின் கடற்படையில் மட்டுமே, ஆழ்கடல் மீட்பு கப்பல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT