Published : 14 Jul 2025 06:20 AM
Last Updated : 14 Jul 2025 06:20 AM
நியூயார்க்: இரண்டு வாடிக்கையாளர்களுக்கு பார்வையிழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்ததால், 8.5 லட்சம் ஸ்டீல் தண்ணீர் பாட்டில்களை திரும்பப் பெறுவதாக வால்மார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், ‘ஓசார்க் டிரயல் 64 ஆஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் இன்சுலேட்டடு வாட்டர் பாட்டிலை' கடந்த 2017-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க நுகர்பொருள் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம் (சிபிஎஸ்சி) வெளியிட்ட அறிவிக்கையில், “வால்மார்ட்டின் ஸ்டீல் தண்ணீர் பாட்டிலில் கார்பன் ஏற்றப்பட்ட பானங்கள் அல்லது பழச்சாறு அல்லது பால் போன்ற கெட்டுப்போகக் கூடிய பானங்களை அடைத்து வைத்துவிட்டு திறந்தபோது அதன் மூடி அதிக அழுத்தத்துடன் வெளிப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, அவ்வாறு திறந்தபோது அதன் மூடி முகத்தில் தாக்கியதில் காயமடைந்ததாக 3 வாடிக்கையாளர்கள் வால்மார்ட் நிறுவனத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதில் 2 பேரின் கண்ணில் மூடி பட்டதால் பார்வை நிரந்தரமாக பறிபோய் உள்ளது. எனவே, இந்த பாட்டில்களை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த பாட்டிலை வால்மார்ட் நிறுவனத்திடம் ஒப்படைத்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்’’ என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து வால்மார்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “வாடிக்கையாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு நாங்கள் எப்போதும் அதிக முன்னுரிமை வழங்குகிறோம். பிரச்சினைக்குரிய 8.5 லட்சம் தண்ணீர் பாட்டில்களை எங்கள் விற்பனை மையங்களில் கொடுத்து அதற்கான பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த விவகாரத்தில் சிபிஎஸ்சி-க்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். இந்த பாட்டில்களின் விற்பனையை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT