Published : 14 Jul 2025 12:49 AM
Last Updated : 14 Jul 2025 12:49 AM
சென்னை: தமிழகத்தில் மின்சார ஆட்டோ, டாக்ஸிகளுக்கு 500 இடங்களில் பேட்டரி மாற்று மற்றும் ‘சார்ஜிங்’ மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கிலும், தற்போதைய சூழல் மாற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தூய்மையான மற்றும் நிலைத்த நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலும் நடவடிக்கைளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, தமிழக அரசு கடந்த 2023-ம் ஆண்டு திருத்திய மின் வாகனக் கொள்கையை வெளியிட்டது. மின்வாகன உற்பத்தித் துறையில் ரூ.50 ஆயிரம் கோடிக்கு முதலீடுகள் மற்றும் 1.50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது இந்த கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.
அதன்படி, மின்சார வாகனங்களுக்கு சாலை வரி விலக்கு, பதிவுக் கட்டணம் மற்றும் அனுமதி கட்டணம் தள்ளுபடி போன்ற சலுகைகள் இந்த ஆண்டு இறுதி வரை வழங்க அனுமதிக்கப்பட்டது. மேலும் மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் மின்னேற்ற (சார்ஜிங்) நிலையங்கள், பொது மின்கல (பேட்டரி) மாற்று நிலையங்களுக்கான ஊக்கச் சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் பொது இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டே 9 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. தனியார் பொது பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் அவை பயன்பாட்டுக்கு வர உள்ளன.
இதற்கிடையே, சென்னையில் முதற்கட்டமாக 120 மின்சார பேருந்துகள் பொது பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 625 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளன. இதுதவிர, தனி நபர் மின் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கவும், போக்குவரத்து சேவைகளில் மின் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தூய்மையான மற்றும் நிலைத்த நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் மற்றும் இந்திய போக்குவரத்து மற்றும் மேம்பாட்டு கொள்கை நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி இந்திய போக்குவரத்து மற்றும் மேம்பாட்டு கொள்கை நிறுவனம் ஆலோசனைகளை வழங்கும். அதனை தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் செயல்படுத்தும்.
இந்த ஒப்பந்தத்தின்படி இந்திய போக்குவரத்து மற்றும் மேம்பாட்டு கொள்கை நிறுவனம் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் அதனை தமிழகத்தில் எப்படி செயல்படுத்துவது என்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கும்.
இந்த ஒப்பந்தத்தில், முக்கிய பகுதிகளில் பொது பயன்பாட்டுக்காக ஒரு தனித்துவமான மின்சார வாகன சார்ஜிங் செயலியை உருவாக்குதல், மின் வாகன கொள்கைகள் மற்றும் சந்தை தகவல்களுக்கு ஒருங்கிணைந்த வலைதளத்தை உருவாக்குதல், நிலம் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறன் மதிப்பீடுகளுக்கான திட்டமிடல், மற்றும் நகர அடிப்படையிலான விரிவாக்கக் கூடிய மின் வாகன கட்டமைப்பு வரைபடங்களை தயாரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் தமிழ்நாட்டில் நிலைத்த நகர் போக்குவரத்து காலநிலை மாற்ற நடவடிக்கைகள் மற்றும் பசுமை ஆற்றல் கண்டுபிடிப்புகள் அதிகரிக்கும். எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு சிறந்த மின்சார போக்குவரத்து சூழல் உருவாகும்.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் நகர்ப்புறங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர பொதுபோக்குவரத்தில் ஆட்டோ, டாக்ஸிபோன்ற சேவைகளில் மின் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க நகரங்களில் பேட்டரி மாற்று நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி போன்ற நகரங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில் இதை தமிழகத்திலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே செயல்பட்டு வரும் தனியார் சார்ஜிங் நிலையங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பிரத்யேக குறைதீர் மையம் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT