Last Updated : 30 Jun, 2025 11:13 PM

 

Published : 30 Jun 2025 11:13 PM
Last Updated : 30 Jun 2025 11:13 PM

ரயில் கட்டண உயர்வு, தட்கல் டிக்கெட், ஆதார் - பான் இணைப்பு: ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள் என்ன?

புதுடெல்லி: ஜூலை 1 முதல் ரயில் கட்டணம், தட்கல் டிக்கெட் முன்பதிவு, ஆதார் - பான் இணைப்பு உள்ளிட்டவற்றில் முக்கிய மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது

பான் - ஆதார் இணைப்பு: ஜூலை 1 (செவ்வாய்க்கிழமை) முதல் புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஏற்கெனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலகெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் இணைக்க தவறினால், ஏற்கனவே உள்ள பான் எண் செயலிழக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இதுவரை புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஓட்டுநர் உரிமம். பிறப்புச் சான்றிதழ் போன்ற அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எந்தவொரு அடையாள அட்டையும் செல்லுபடியாகி வந்தது.

தட்கல் டிக்கெட் முன்பதிவு: தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக, 2.5 கோடி போலி கணக்குகளை அண்மையில் கண்டறிந்து ஐஆர்சிடிசி நீக்கியது. தட்கல் டிக்கெட்களை மக்கள் எளிதாகப் பெறும் வகையில் விரைவில் ஆதார் அங்கீகார முறை தொடங்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். இதன்மூலம், பயணிகள் எளிதாக தட்கல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்றும், இந்தப்பணியை சிஆர்ஐஎஸ் மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதன்படி நாளை முதல் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படுகிறது. அத்துடன் வரும் ஜூலை 15 முதல், அனைத்து டிக்கெட்டுகளுக்கும், இரண்டு காரணி அங்கீகாரம் ( two-factor authentication) அவசியம். இதன் மூலம் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கடவுச் சொல் அனுப்பப்படும்.

ரயில் கட்டண உயர்வு: இன்னொரு புறம், நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) முதல் பயணிகள் ரயில் சேவை அடிப்படை கட்டணம் உயர்த்தப்படுகிறது.

புறநகர் ரயில் பயணக் கட்டணங்கள் மற்றும் சீசன் டிக்கெட் கட்டணத்தில் (புறநகர் மற்றும் புறநகர் அல்லாத வழித்தடங்களுக்கு) எந்த மாற்றமும் இல்லை. சாதாரண ஏசி அல்லாத வகுப்புகளுக்கு (புறநகர் அல்லாத பிற ரயில்கள்): இரண்டாம் வகுப்பு - ஒரு கிலோமீட்டருக்கு அரை பைசா அதிகரிப்பு. (நிபந்தனைக்கு உட்பட்டது)

மேலும் வாசிக்க > பயணிகள் ரயில் கட்டணம் உயர்வு: எத்தனை கி.மீ.-க்கு எவ்வளவு அதிகரிப்பு?

வருமான வரி தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு: 2025-26 நிதிஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31 ஆக இருந்த நிலையில் தற்போது இது செப்டம்பர் 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடு தணிக்கை அல்லாத வரி செலுத்துவோருக்கு (பெரும்பாலான சம்பளம் வாங்கும் தனிநபர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்கள்) மட்டுமே பொருந்தும். ஆனால் இறுதி வரி அல்லது சுய மதிப்பீட்டு வரி போன்ற நிலுவையில் உள்ள எந்தவொரு வரிகளையும் ஜூலை 31, 2025-க்கு முன்பே செலுத்த வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு இந்த வரிகளைச் செலுத்துவோர், செப்டம்பர் 15, 2025-க்குள் வருமானத்தை தாக்கல் செய்தாலும், வட்டி மற்றும் அபராதம் போன்ற விளைவுகளை சந்திக்க நேரிடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x