Last Updated : 30 Jun, 2025 08:58 PM

1  

Published : 30 Jun 2025 08:58 PM
Last Updated : 30 Jun 2025 08:58 PM

‘கேப்டன் கூல்’ - டிரேட்மார்க் பதிவு செய்த தோனி!

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியை ரசிகர்கள் ‘கேப்டன் கூல்’ என அன்போடு அழைப்பது வழக்கம். இந்நிலையில், அந்த புனைப்பெயருக்கு டிரேட்மார்க் கோரி அவர் தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மகத்தான வீரர்களில் ஒருவராக தோனி விளங்குகிறார். அண்மையில் ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், ‘கேப்டன் கூல்’ பெயருக்கு அவர் டிரேட்மார்க் கோரி விண்ணப்பித்துள்ளார். இது அவரது ஆளுமையுடன் தொடர்பு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 5-ம் தேதி இந்த விண்ணப்பத்தை தோனி பதிவு செய்துள்ளார். அதை ஏற்றுக் கொண்டுள்ளதாக டிரேட்மார்க் பதிவேட்டுக்கான போர்ட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான அறிவிப்பு ஜூன் 16-ம் தேதி வெளியான அதிகாரபூர்வ டிரேட்மார்க் இதழில் இடம்பெற்றுள்ளது.

முதலில் தோனியின் விண்ணப்பத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இது தொடர்பாக தோனியின் வழக்கறிஞர் தரப்பு தங்கள் வாதத்தை முன் வைத்துள்ளது. ‘கேப்டன் கூல்’ என தோனியை ரசிகர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் குறிப்பிட்டு வருகின்றன என தெரிவித்துள்ளது. அதன் பின்னர்தான் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு பயிற்சி மற்றும் சேவைகளை வழங்குவதற்கான பிரிவின் கீழ் இந்த விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேப்டன் கூல்: ஆட்டத்தில் அழுத்தம் நிறைந்த தருணத்திலும் மிகவும் கூலாக அணியை வழிநடத்தும் தோனியின் பண்பை போற்றும் வகையில் ரசிகர்கள் அவரை ‘கேப்டன் கூல்’ என அழைப்பதுண்டு.

தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி தொடர்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அன்மையில் முடிந்த ஐபிஎல் 2025 சீசனில் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கேப்டனாக தோனி வழிநடத்தி இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x