Published : 30 Jun 2025 06:19 AM
Last Updated : 30 Jun 2025 06:19 AM
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து வரும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை இந்திய துறைமுகங்கள் வழியாக (கப்பல் மூலம்) நேரடியாகவும் மறைமுகமாகவும் கொண்டு செல்ல மத்திய அரசு தடை விதித்தது. இதனால் கடல்சார் தளவாட போக்குவரத்து பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், விதிமீறல்களை கண்டறிவதற்கான சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்த நடவடிக்கையின்படி இதுவரை ரூ.9 கோடி மதிப்புள்ள 1,100 டன் பொருட்களை ஏற்றிச் சென்ற 39 கன்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பொருட்கள் ஐக்கிய அரபு அமீரக பொருட்கள் என தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது சோதனையில் தெரியவந்தது.
இதுகுறித்து கராச்சி சேம்பர் ஆப் காமர்ஸ் அன்ட் இண்டஸ்ட்ரி தலைவர் ஜாவேத் பில்வானி கூறும்போது, “இந்தியாவின் தடையால் பெரிய கப்பல்கள் பாகிஸ்தானுக்கு வருவதில்லை. இதனால் இறக்குமதியாளர்கள் சிறிய கப்பல்களை நம்பி இருப்பதால் சரக்கு போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. அத்துடன் இறக்குமதி 30 முதல் 50 நாட்கள் வரை தாமதமாகிறது.
இதுபோல சரக்கு போக்குவரத்து கட்டணம், குறிப்பாக காப்பீட்டு செலவு உயர்ந்துள்ளதாக ஏற்றுமதியாளர்களும் தெரிவித்துள்ளனர் என்றார். மதிப்பு கூட்டலுக்காக, இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களை பெரிதும் நம்பியுள்ள பாகிஸ்தானின் ஏற்றுமதி துறை இப்போது கூடுதல் செயல்பாட்டு சிக்கல்களை எதிர்கொள்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு நிகழ்ந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 200% ஆக மத்திய அரசு அதிகரித்தது. அதன் பிறகு இருதரப்பு வர்த்தகம் குறைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT