Published : 29 Jun 2025 01:12 AM
Last Updated : 29 Jun 2025 01:12 AM

ரூ.51,000 கோடியை தானமாக வழங்கிய வாரன் பபெட்

அமெரிக்க தொழிலதிபர் வாரன் பபெட், 5 அறக்கட்டளைகளுக்கு ரூ.51,000 கோடியை தானமாக வழங்கி உள்ளார்.

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில், அமெரிக்க தொழிலதிபர் வாரன் பபெட் 5-வது இடத்தில் உள்ளார். 94 வயதாகும் அவர் பங்கு சந்தையின் பிதாமகன் என்று அழைக்கப்படுகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.12.97 லட்சம் கோடி ஆகும்.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் வாரன் பபெட் தனது சொத்துகளை பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு தானமாக வழங்கி வருகிறார். இந்த வரிசையில் தற்போது அவர், 5 அறக்கட்டளைகளுக்கு ரூ.51,000 கோடியை தானமாக வழங்கியிருக்கிறார்.

இதன்படி கேட்ஸ் அறக்கட்டளை, சூசன் தாம்சன் பபெட் அறக்கட்டளை, ஷெர்வுட் அறக்கட்டளை, ஹோவர்ட் பபெட் அறக்கட்டளை, நோவோ அறக்கட்டளை ஆகிய 5 அறக்கட்டளைகளுக்கு நாளை ரூ.51,000 கோடி மதிப்புள்ள பங்குகள் வழங்கப்பட உள்ளன. இதில் கேட்ஸ் அறக்கட்டளையை தவிர்த்து இதர 4 அறக்கட்டளைகளை வாரன் பபெட்டின் குடும்பத்தினர் நிர்வகிக்கின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் வாரன் பபெட் ரூ.5.1 லட்சம் கோடியை தானமாக வழங்கியிருக்கிறார். தற்போது ரூ.51,000 கோடியை வழங்கியிருப்பதன் மூலம் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 5-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு அவர் இறங்கி உள்ளார்.

வாரன் பபெட்டின் மூத்த மகள் சுசிக்கு தற்போது 71 வயதாகிறது. அவரது 2-வது மகன் ஹோவர்டு 70 வயதை எட்டியுள்ளார். 3-வது மகன் பீட்டருக்கு 67 வயதாகிறது. இவர்கள் 3 பேரும் பல்வேறு அறக்கட்டளைகளை நடத்துகின்றனர். இந்த அறக்கட்டளைகள் மூலம் உலகம் முழுவதும் கல்வி, சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் அவர்கள் சேவை செய்து வருகின்றனர்.

வாரன் பபெட் அண்மையில் கூறும்போது, “எனது இறப்புகக்கு நாம் சம்பாதித்த சொத்துகளில் 99.5 சதவீதம் எனது குடும்பத்தினர் நடத்தும் அறக்கட்டளைகளுக்கு தானமாக வழங்கப்படும்" என்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் உயிலும் எழுதி வைத்திருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x