Published : 27 Jun 2025 01:01 PM
Last Updated : 27 Jun 2025 01:01 PM
கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள ஆப்பிள் மரங்களில் காய்கள் காய்த்துக் குலுங்குகின்றன. நம் நாட்டில் காஷ்மீர், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் மட்டுமே ஆப்பிள் விளைகிறது. கொடைக்கானல் மலையில் நிலவும் தட்பவெப்ப நிலையில் ஆப்பிள் விளையுமா என்ற சந்தேகத்தை தீர்க்கும் வகையில், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு சோதனை முறையில் ஆப்பிள் மரக்கன்றுகள் நடப்பட்டன. சில ஆண்டுகளில் அவை காய்க்க தொடங்கின. அதைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கும் ஆப்பிள் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இது தவிர, மேல்மலை கிராமங்களில் விவசாயிகள் சிலர் காஷ்மீரில் இருந்து வாங்கி வந்த ஆப்பிள் மரக்கன்றுகளை நட்டனர். தற்போது சீசனையொட்டி, ஆப்பிள் மரங்களில் காய்கள் காய்த்துக் குலுங்குகின்றன. அதனை உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து கவுஞ்சியை சேர்ந்த விவசாயி மூர்த்தி கூறியதாவது: காஷ்மீரில் ஆப்பிள் சாகுபடி குறித்த பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்ட பின்னர், அங்கிருந்து வாங்கி வந்த ரெட் டெலிசியஸ், டார்செட் கோல்டன் ரக ஆப்பிள் மரக்கன்றுகளை எனது தோட்டத்தில் பயிரிட்டுள்ளேன்.
தற்போது 6-வது ஆண்டாக ஆப்பிள்கள் காய்த்துக் குலுங்குகின்றன. நவம்பர், டிசம்பர் மாதத்தில் ஆப்பிள் மரத்தில் கவாத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். பிப்ரவரியில் பூக்கள் பூக்கத் தொடங்கி, ஏப்ரலில் காய்கள் வரத் தொடங்கும். ஜூன் முதல் ஆப்பிள்கள் அறுவடைக்கு தயாராகும்.
ஆப்பிளின் நிறத்தை வைத்து அதன் இனிப்பு சுவை, அறுவடைக்கு தயாராகி விட்டதா என்பதை அறிய முடியும். ஒரு மரம் 15 அடி வரை வளரும். பயிரிட்ட 6-வது ஆண்டில் இருந்து மகசூல் கிடைக்கும். நன்கு முதிர்ந்த ஒரு மரத்தில் இருந்து குறைந்தது 20 கிலோ, அதிகபட்சமாக 40 கிலோ வரை ஆப்பிள் அறுவடை செய்யலாம். ஆப்பிள் சாகுபடிக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை கொடைக்கானலில் உள்ளது. தோட்டக்கலைத் துறை மூலம் தொழில்நுட்ப ஆலோசனை, முறையான பயிற்சி அளித்து, விவசாயிகளை ஊக்குவித்தால் ஆப்பிள் சாகுபடியிலும் வருவாய் ஈட்ட முடியும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT