Published : 27 Jun 2025 05:20 AM
Last Updated : 27 Jun 2025 05:20 AM

வரும் நாட்களில் தங்கம் விலை உயர வாய்ப்பு: புதிய உச்சத்தைத் தொடும் என வியாபாரிகள் கருத்து

சென்னை: வரும் நாட்களில் தங்கம் விலை உயர வாய்ப்பிருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர். சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை மூலம் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அவ்வப்போது தங்கத்தின் விலை சற்று குறைந்தாலும், போர்ப் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் அதிகளவு உயர்ந்தது. குறிப்பாக கடந்த 14-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,560 என்றளவில் வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 23-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. குறிப்பாக கடந்த 22-ம் தேதி பவுன் ரூ.73,880-க்கும் நேற்று முன்தினம் ரூ.72,560 என்றும் விற்பனையானது. அந்த வகையில் 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,320 குறைந்தது.

இந்நிலையில் நேற்று விலையில் மாற்றமின்றி, அதே விலைக்கு விற்பனையானது. அதேநேரம் வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.120-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,000 அதிகரித்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

இதுகுறித்து தங்க நகை வியாபாரிகள் கூறியதாவது: தங்கம் விலை பெரியளவில் குறைவதற்கு வாய்ப்பில்லை. தங்கத்தின் தேவை மற்றும் அதன் மீதான முதலீடுகள் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தாது. நடப்பாண்டு இறுதிக்குள் புதிய உச்சத்தை நிச்சயமாகத் தொடும். உலகளவில் தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் தேவையும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக மின்சார வாகனம், மின்சாதனப் பொருட்கள் போன்ற தொழிற்சாலைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், வெள்ளி விலை உயர்ந்துள்ளது. அண்மை காலமாக தங்கத்தை விட அதிகமான லாபம் வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு கிடைத்திருக்கிறது. வரும் காலங்களில் வெள்ளி விலையும் புதிய உச்சத்தை அடையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x